அஸ்வின் சுழலில் சுருண்ட வங்கதேசம்: சென்னை டெஸ்டில் இந்தியா வெற்றி

டெஸ்டில் 37-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் அஸ்வின்.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களும், வங்கதேசம் 149 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன்மூலம், வங்கதேசத்தின் வெற்றிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டே 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தொடக்கத்தில் சிராஜ் மற்றும் பும்ரா அட்டகாசமாக பந்துவீசினார்கள். விக்கெட்டுக்கான அனைத்து வாய்ப்புகளையும் இருவரும் உருவாக்கினார்கள். பலனாக விக்கெட் மட்டும்தான் கிடைக்கவில்லை.

இரு இடக்கை பேட்டர்களுக்கும் ஜடேஜா பந்தை உள்பக்கம் நன்கு திருப்பி பந்துவீசினார். கூடுதல் பவுன்ஸும் ஜடேஜாவுக்குக் கிடைத்தது. ஜடேஜாவைக் கையாள பேட்டர்களைவிட பந்த் நிறைய திணறினார். ஷகிப்புக்கு ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பையும் தவறவிட்டார்.

ஷாண்டோ, ஷகிப் முதல் அரை மணி நேரம் விக்கெட்டை இழக்காமல் இருந்தார்கள். சிறிய குடிநீர் இடைவேளைக்குப் பிறகு அஸ்வின் அறிமுகம் செய்யப்பட்டார். முதல் ஓவரிலேயே ஷகிப் விக்கெட்டை வீழ்த்தி கூட்டணியைப் பிரித்தார்.

இந்த விக்கெட்டை தொடர்ந்து, வங்கதேச பேட்டர்கள் அடுத்தடுத்து நடையைக் கட்டத் தொடங்கினார்கள். ஒருபக்கம் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்டில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது 37-வது முறை.

ஜடேஜாவும் இன்னொரு புறம் பந்தை சுழற்றினார். 82 ரன்கள் எடுத்து நன்கு விளையாடி வந்த ஷாண்டோ இவரிடம் ஆட்டமிழந்தார். ஹசன் மஹமூத்தைக் கடைசி விக்கெட்டாக வீழ்த்தினார் ஜடேஜா.

இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் 234 ரன்களுக்குச் சுருண்டது. இதன்மூலம் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

பேட்டிங்கில் சதமடித்து, பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in