
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து அஸ்வின் வெளியேறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்திடம் அஸ்வின் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டியில் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்தார் அஸ்வின். 2016 முதல் 2024 வரை ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடினார். ஐபிஎல் 2025-க்கு முன்பு மெகா ஏலத்தில் சிஎஸ்கேவால் ரூ. 9.75 கோடிக்குத் தேர்வானார் அஸ்வின்.
ஆனால், ஐபிஎல் 2025 சிஎஸ்கேவுக்கும் சரியாக அமையவில்லை, அஸ்வினுக்கும் சரியாக அமையவில்லை. 9 ஆட்டங்களில் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே அவர் வீழ்த்தினார். சுழற்பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, நூர் அஹமது இருந்ததால் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக அஸ்வினின் தேவை கேள்விக்குள்ளானது.
இந்நிலையில், அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எம்எஸ் தோனி, ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் சிஎஸ்கே நிர்வாகிகள் சிலர் சிஎஸ்கேவின் எதிர்காலம் குறித்து சென்னையில் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் தான் அஸ்வினின் செய்தி தகவலாகக் கசிந்து வருகிறது.
இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பும் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சஞ்சு சாம்சனும் ஏலத்துக்கு முன்பு தன்னை அணியிலிருந்து விடுவிக்குமாறு ராஜஸ்தான் ராயல்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்குக் கூட வரலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. சஞ்சு சாம்சன் வரிசையில், அஸ்வினும் இதைச் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பது பல்வேறு முடிச்சுகளை இணைக்கிறது.
Ashwin | Chennai Super Kings | CSK | IPL 2025 | IPL 2026 | IPL | Sanju Samson | Rajasthan Royals