
சிஎஸ்கே வீரர் அஸ்வினிடம் விராட் கோலியின் அலைபேசி எண்ணைக் கேட்டு டெவான் கான்வே பெயரில் ஒருவர் ஏமாற்ற முயற்சித்துள்ளார்.
சத்தீஸ்கரில் அண்மையில் ஒருவர் புதிய சிம் கார்டை வாங்கியுள்ளார். இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் கேப்டன் ரஜத் படிதார் முன்பு பயன்படுத்திய எண். விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸிடமிருந்து இந்த அலைபேசி எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. இதுதொடர்பாக தெரியவந்தவுடன் ரஜத் படிதார் காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். பிறகு, சம்பந்தப்பட்ட நபர் தனது சிம் கார்டை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அஸ்வினும் தனது யூடியூப் சேனலில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
"ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் டெவான் கான்வேயிடமிருந்து, எப்படி இருக்கிறாய்? என்று குறுஞ்செய்தி வந்தது. நான் அவருடன் உரையாடினேன். எம்எல்சி போட்டியைக் காண ஆர்வமாக உள்ளேன் என்றெல்லாம் பேசினேன்.
பிறகு, விராட் கோலியின் நம்பரை தவறவிட்டுவிட்டேன். பகிர முடியுமா? என்று கேட்டார். கோலியின் நம்பர் எதற்கு என்று அவரிடம் கேட்கத் தோன்றியது. ஆனால், என் எண்ணத்தை அவர் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று நினைத்தேன். எனவே, விராட் கோலியின் வேறொரு நம்பரை பகிர்ந்தேன்.
அதைப் பகிர்ந்தவுடன் மேலும் சில நம்பர்களை கேட்டார். யாருடைய நம்பர் வேண்டும் எனப் பட்டியலிடச் சொன்னேன். அவர் ரோஹித் சர்மா மற்றும் எம்எஸ் தோனி பெயர்களைச் சொன்னார்.
இதன்பிறகு தான், யாரோ விளையாடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் நான் கொடுத்த பேட்டை பற்றி அவரிடம் கேட்டேன். அவர் அந்த பேட் அட்டகாசமாக இருக்கிறது என்றார். ஆனால், நான் டெவான் கான்வேவுக்கு பேட்டை கொடுக்கவே இல்லை. இதன்மூலம், பொய் சொல்லி அவர் மாட்டிக்கொண்டார். உடனடியாக, நான் அவரை பிளாக் செய்தேன்.
என்னிடம் டெவான் கான்வேயின் நம்பர் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டார். பிறகு, சிஎஸ்கே அணியின் குரூப்பில் டெவான் கான்வேயின் நம்பரை சரிபார்த்துக் கொண்டு, அது தவறான நம்பர் என்பதை உணர்ந்தேன்.
குறைந்தபட்சம், விராட் கோலியின் போலி நம்பரை பகிர வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. நாங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்தபோது, கோலி பயன்படுத்திய வாட்ஸ்ஆப் நம்பர் அது" என்றார் அஸ்வின்.
Ashwin| Virat Kohli | Rajat Patidar | Devon Conway | Rohit Sharma | MS Dhoni | Chennai Super Kings | CSK | IPL 2025 | IPL