ஓய்வுக்குப் பிறகு அஸ்வின் அளித்த முதல் பேட்டி: என்ன சொன்னார்?

ஸ்கை ஸ்போர்ட்ஸில் மைக் ஏதர்டன், நாசர் ஹூசைன் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்...
ஓய்வுக்குப் பிறகு அஸ்வின் அளித்த முதல் பேட்டி: என்ன சொன்னார்?
1 min read

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அஸ்வின், ஸ்கை ஸ்போர்ட்ஸில் மைக் ஆதர்டன், நாசர் ஹூசைன் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். தனது திடீர் ஓய்வு குறித்தும் தலைமைப் பண்பு குறித்தும் அந்தப் பேட்டியில் பேசிய அஸ்வின், கிரிக்கெட்டின் பல நுணுக்கங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

இந்தப் பேட்டியில் எம்எஸ் தோனியின் தலைமைப் பண்பு குறித்த கேள்விக்கு துஷார் தேஷ்பாண்டே உதாரணத்துடன் அஸ்வின் விளக்கமளித்தார்.

"என்னைப் பொறுத்தவரை, பெரும்பாலான அடிப்படையான விஷயங்களை தோனி சரியாக செய்வார். பெரும்பாலான மற்ற கேப்டன்கள், அடிப்படையான விஷயங்களைத் தவறவிடுவார்கள். இதனால்தான், ஆட்டம் அவர்களுக்குக் கடினமாகிறது.

ஒரு பந்துவீச்சாளரிடம் தோனி பந்தைக் கொடுக்கும்போது, உனக்கான ஃபீல்டிங்கை முடிவு செய்து, அதற்கேற்ப பந்துவீசு என்று சொல்வார். புதிதாகக் களமிறங்கும் பேட்டர், தொடக்கத்திலேயே 2, 3 பவுண்டரிகள் அடிக்கும் வகையில் நான் பந்துவீசினால், அவை பவுண்டரிகளுக்கு தகுதியானவை எனும் பட்சத்தில் தோனி என் பந்துவீச்சை நிறுத்த மாட்டார்.

அதுவே, புதிதாகக் களமிறங்கிய பேட்டர் ஒருவர், கட் செய்யும் வகையில் அல்லது டிரைவ் செய்யும் வகையில் பந்துவீசினால் அவர் மிகவும் கோபமடைந்துவிடுவார். என் பந்துவீச்சை நிறுத்திவிடுவார்.

இது கிரிக்கெட்டின் அடிப்படையான சாராம்சம். ஆனால், ஆண்டுகள் கடக்கையில் மக்கள் அடிப்படையை மறந்துவிட்டார்கள்.

கிரிக்கெட்டில் சில விஷயங்களில் சமரசமே செய்யக் கூடாது. கிரிக்கெட்டில் எவ்வளவு தூரம் சென்றாலும் சரி... எந்தளவுக்கு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியை அடைந்தாலும் சரி, ஒரு சில அடிப்படையான விஷயங்கள் மாறவே மாறாது. இதுமாதிரியான அடிப்படையான விஷயங்களை தோனி மிகவும் எளிமையாகக் கடைபிடித்து, அதன்மூலம் பலன்களைப் பெறுகிறார்.

கடந்தாண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து ஓர் உதாரணம் சொல்கிறேன். துஷார் தேஷ்பாண்டேவைத் தேர்வு செய்து, அவரிடமிருந்து சிறந்த பந்துவீச்சைப் பெற்றார். இதுகுறித்து நிறைய பேர் பேசினார்கள்.

துஷார் தேஷ்பாண்டேவிடம் எம்எஸ் தோனி என்ன சொல்லியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.

அதிக தூரம் கொண்ட பவுண்டரி திசை நோக்கி அடிக்கும் வகையில் பந்துவீசு. கடந்த ஆட்டத்தில் நீ கொடுத்த ரன்களைவிட, இந்த ஆட்டத்தில் இரு ரன்கள் குறைவாகக் கொடு என்றிருப்பார்.

இது பந்துவீச்சாளருக்குள் இரு விஷயங்களை உண்டாக்கும். முதலில் அவருக்குள் இருக்கும் அழுத்தம் தணியும். இரண்டாவது, மிகச் சிறிய இலக்கில் எப்படி மேம்பட முடியும் என அவரைச் சிந்திக்க வைக்கும்.

ஒருவேளை அவுட் ஸ்விங் செய்து, வலது கை பேட்டருக்கு பந்தை உள்ளே கொண்டு செல் என்று பந்துவீச்சாளரிடம் நான் கூறினால், செயல்படுத்துவதற்கு அது பெரிய இலக்கு.

களத்தில் ஒரு பகுதியில் மட்டும் பந்துவீசு, இரு ரன்கள் குறைவாகக் கொடுத்தால்போதும் என்றால், நிறைய வாய்ப்புகள் குறித்து சிந்திக்க அது வழிவகுக்கும்.

இதுதான் எம்எஸ் தோனியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. மற்றவர்களைக் காட்டிலும் அடிப்படையான விஷயங்களை ஒவ்வொரு நாளும் அவர் மிக மிகச் சிறப்பாக செய்வார்" என்றார் அஸ்வின்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in