
புனேவில் நடைபெற்ற டி20யில் ஷிவம் துபேவுக்கு மாற்று வீரராக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டது குறித்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அஸ்வின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக புனேவில் நடைபெற்ற 4-வது டி20யில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-1 என முன்னிலை பெற்று தொடரை வென்றுள்ளது.
இந்த ஆட்டத்தில் ஷிவம் துபே பேட்டிங் செய்தபோது அவருடைய தலைக்கவசத்தைப் பந்து தாக்கியது. இதனால் அவருக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டதால் இந்திய அணி பந்துவீசியபோது மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கினார். அவர் அற்புதமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
ஐசிசி விதிமுறைகளின்படி ஒரு வீரரின் தலைக்கவசத்தில் பந்து தாக்கி, அவருக்கு தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனால் அவருடைய திறமைகளைக் கொண்ட ஒரு வீரரையே மாற்று வீரராகத் தேர்வு செய்யமுடியும். அதன்படி ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா தேர்வானது சர்ச்சையானது.
இதுதொடர்பாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "ஓர் அணி ஷிவம் துபேவுக்குப் பதில் மாற்று வீரராக ஹர்ஷித் ராணா வேண்டும் என்று கேட்கலாம். ஆனால், இந்திய அணியில் ரமண்தீப் சிங் இருக்கும்போது, ஹர்ஷித் ராணாவை எப்படி மாற்று வீரராக அனுமதிக்கலாம்? துபேவுக்கு சரியான மாற்று வீரர் ரமண்தீப் சிங் என்றால் நான் ஒப்புக்கொள்வேன். ஆனால், ஹர்ஷித் ராணா என்றால் அதில் என்ன நியாயம் உள்ளது? இதற்கு யார் ஒப்புதல் அளித்தது?" என்று அஸ்வின் தனது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் ஆட்டத்தில் இம்பாக்ட் வீரர் விதிமுறை போல இது மாறிவிட்டதாகவும் அஸ்வின் கேலியாகப் பேசியிருந்தார்.
முன்னதாக, இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லரும் துபேவுக்குப் பதில் மாற்று வீரர் ஹர்ஷித் ராணா என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். "நிச்சயமாக ஷிவம் துபேவுக்கான சரியான மாற்று வீரர் ஹர்ஷித் ராணா கிடையாது. இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அப்படியென்றால் ஷிவம் துபே கூடுதலாக மணிக்கு 25 மைல் வேகமாகப் பந்துவீச வேண்டும். அல்லது ஹர்ஷித் ராணா தன்னுடைய பேட்டிங்கை இன்னும் மெருக்கேற்ற வேண்டும். இதுகுறித்த தெளிவுக்காக ஆட்ட நடுவர் ஜகவல் ஸ்ரீநாத்திடம் நாங்கள் கேள்விகளை எழுப்புவோம். அதேசமயம் இந்த ஒரு காரணத்துக்காக நாங்கள் தோற்கவில்லை" என்றார் பட்லர்.