டிஎன்பிஎல்: அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் சாம்பியன்!

மூன்றாவது முறையாக இறுதிச் சுற்று வரை முன்னேறிய திண்டுக்கல் டிராகன்ஸ் முதன்முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்றுள்ளது.
டிஎன்பிஎல்: அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் சாம்பியன்!
படம்: https://x.com/@TNPremierLeague
2 min read

டிஎன்பிஎல் இறுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் கோப்பையை வென்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) இறுதிச் சுற்றில் ஷாருக் கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ், அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இரவு 7.40-க்கு போடப்பட்ட டாஸில் அஸ்வின் வென்றார், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கோவைக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. 3 பவுண்டரிகள் அடித்து அதிரடி காட்டிய சுஜய் 12 பந்துகளில் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோவையின் நம்பிக்கை நட்சத்திரமான சாய் சுதர்சன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் விழுந்தவுடன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி, பி விக்னேஷ் ஆகியோர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்கள்.

அஸ்வினுக்கு விக்கெட் கிடைக்காதபோதிலும், 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கோவை அணியில் எந்தவொரு பேட்டரும் பெரிய இன்னிங்ஸை விளையாடவில்லை. வந்ததும் போனதுமாக இருந்ததால், அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ராம் அர்விந்த் 27 ரன்கள் எடுத்தது தான் அதிகபட்ச ஸ்கோர். கேப்டன் ஷாருக் கானும் பேட்டிங்கில் ஏமாற்றமளித்தார். திண்டுக்கலில் சந்தீப் வாரியர், வருண் சக்ரவர்த்தி, பி விக்னேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சுபோத் பாடி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் களமிறங்கியது. திண்டுக்கல்லுக்கும் தொடக்கம் மோசமாக அமைந்தது. விமல் குமார் 9 ரன்களுக்கும், ஷிவம் சிங் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

அனுபவ வீரர்களான கேப்டன் அஸ்வின் மற்றும் பாபா இந்திரஜித் கூட்டணி அமைத்தார்கள். தொடக்கத்தில் அஸ்வின் அதிரடி காட்டினாலும், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் குறைவு என்பதால் பவர்பிளேவுக்கு பிறகு அவசியமில்லாமல் பெரிய ஷாட்டுக்கு செல்லவில்லை. 6 ஓவர்களில் அந்த அணி 46 ரன்கள் சேர்த்தது.

10 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து ஆட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கடைசி 42 பந்துகளில் 43 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. விக்கெட்டுகள் கிடைக்காததால் கேப்டன் ஷாருக் கான் பந்தைக் கையிலெடுத்தார். பலனாக, இந்திரஜித் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், அடுத்து களமிறங்கிய சரத் குமார் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் அடித்து நெருக்கடியைத் தணித்தார். சரத்குமார் அதிர்ஷ்டத்துடன் அதிரடி காட்டினாலும், பொறுப்பாக விளையாடிய அஸ்வின் 42 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவருக்கு இது தொடர்ந்து மூன்றாவது அரை சதம். அனைத்தும் பிளே ஆஃப் சுற்றில் வந்தவை. கடைசி 3 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் யுதீஸ்வரன் பந்தில் அஸ்வின் ஆட்டமிழந்தார். இவர் 46 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். ஷாருக் கான் வீசிய 19-வது ஓவரில் சரத் குமார் சிக்ஸர் அடிக்க, திண்டுக்கல் வெற்றியை உறுதி செய்தது. 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்த திண்டுக்கல் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சரத் குமார் 15 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார்.

2018, 2019 ஆகிய ஆண்டுகளில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய திண்டுக்கல் டிராகன்ஸ் முதல்முறையாக டிஎன்பிஎல் கோப்பையை வென்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in