ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழைத் தொடர்ந்து ஹிந்தி மொழியில் புதிய யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் 101 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் சதமடித்து அசத்தினார், மேலும் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இவர் அன்றாட வாழ்வில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். 15.4 லட்சம் ஆதரவாளர்களைக் கொண்ட இவர் ஹிந்தி மொழியில் புதிய யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்.
ஹிந்தி ரசிகர்கள் தங்களது மொழியிலும் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குமாறு அஸ்வினிடம் கேட்டுக்கொண்டதை அடுத்து ‘Ash Ki Baat’ என்கிற புதிய யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்.
இந்த சேனலின் முதல் காணொளி நேற்று (செப். 23) வெளியிடப்பட்டது.