
அஸ்வின் ஓய்வு பெறுவது கடைசி நிமிடத்தில்தான் தெரியவந்ததாக ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடனான பிரிஸ்பேன் டெஸ்ட் முடிவடைந்தவுடன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். இவருடைய அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
அணியில் அவருடன் அதிக நேரத்தை செலவழித்த ரவீந்திர ஜடேஜாவுக்கும் இந்தச் செய்தி அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜடேஜா கூறியதாவது:
"அஸ்வின் ஓய்வு பெறுவது பற்றி கடைசியில்தான் எனக்குத் தெரியவந்தது. செய்தியாளர்கள் சந்திப்புக்கு 5 நிமிடங்கள் முன்பு தான் தெரியவந்தது. அவருடைய ஓய்வு அதிர்ச்சியளித்தது.
ஒரு நாள் முழுக்க இருவரும் ஒன்றாகக் கழித்தோம். ஆனால், ஓய்வு பெறுவது பற்றி சிறு சமிக்ஞை கூட அவர் கொடுக்கவில்லை. கடைசி நிமிடத்தில்தான் எனக்குத் தெரியவந்தது. அஸ்வினின் மூளை எப்படி செயல்படும் என்பது அனைவருக்கும் தெரியும்.
களத்தில் அவர் எனக்கு ஆலோசகர் மாதிரி. நிறைய ஆண்டுகள் இணைந்து விளையாடி வந்துள்ளோம். ஆட்டத்தின் சூழல், பேட்டர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என களத்தில் நிறைய தகவல்களைப் பரிமாறிக்கொள்வோம். இவை அனைத்தையும் நான் இழந்து வாடுவேன்.
சிறந்த ஆல்-ரௌண்டர், அஸ்வினைவிட சிறந்த பந்துவீச்சாளர் நமக்குக் கிடைப்பார் என நம்புவோம். ஒரு வீரரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றில்லை. எல்லோரும் ஒரு நாள் விடைபெறுவார்கள். ஆனால், அதற்கு மாற்றாக ஒருவரைக் கண்டறிய வேண்டும். நாம் இதிலிருந்து கடந்து செல்ல வேண்டும்.
இந்தியாவில் எப்போதுமே நல்ல திறமைகளுக்குப் பஞ்சமில்லை. எவர் ஒருவருக்கும் மாற்று வீரர் கிடைக்க மாட்டார்கள் என்றில்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள இளைஞர்களுக்கு சரியான வாய்ப்பு" என்றார் ஜடேஜா.