சிஎஸ்கேவில் மீண்டும் அஸ்வின்?: காசி விஸ்வநாதன் பதில்

2016-ல் அஸ்வின், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார்.
அஸ்வின்
அஸ்வின்ANI

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் அஸ்வின் இணைந்துள்ளதாக சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

அஸ்வின், தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாட துவங்கிய காலத்தில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் கிரிக்கெட் அணியிலும் விளையாடி வந்தார். இதன் பிறகு 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வின் 2016-ல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் அஸ்வின் இணைந்துள்ளார்.

சிஎஸ்கே அணி உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய செயல்திறன் மையம் ஒன்றை சென்னையில் தொடங்கவுள்ளது. இங்கு தமிழ்நாடு அணிகளின் ஆட்டங்கள் நடைபெறும் என்றும், சிஎஸ்கே அணியின் பயிற்சி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதற்காக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் அஸ்வின் இணைந்துள்ளதாக சிஎஸ்கே அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“முதலில், எங்கள் உயர் செயல்திறன் மையத்தின் பொறுப்பை அஸ்வின் ஏற்றுக்கொள்வார், அதன் பிறகு அது தொடர்பான வேலைகளை கவனித்துக் கொள்வார். நாங்கள் அவரை மீண்டும் எங்களுடன் இணைந்துக் கொண்டுள்ளோம். மேலும் அவர் டிஎன்சிஏ முதல் டிவிஷன் ஆட்டங்களிலும், இந்தியா சிமெண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடுவார்” என்றார்.

ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலத்தில் அஸ்வின் சிஎஸ்கே அணியால் தேர்வு செய்யப்படுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, “அஸ்வினை ஏலத்தில் வாங்குவது என்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in