
இந்திய அணியில் தன்னை அவமானப்படுத்தியதாகத் தந்தை ரவிச்சந்திரன் குற்றம் சாட்டிய விவகாரத்துக்கு அஸ்வின் பதில் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுடனான பிரிஸ்பேன் டெஸ்ட் முடிவடைந்தவுடன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார் அஸ்வின். உடனடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்டு அவர் சென்னைக்கும் திரும்பினார்.
அவர் சென்னை வந்த நிலையில், அஸ்வினின் தந்தை நியூஸ் 18 ஊடகத்துக்குப் பேட்டியளித்தார்.
"அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு எங்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதேசமயம் அஸ்வின் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால் இதை நாங்கள் எதிர்பார்த்தே இருந்தோம். இதையெல்லாம் எத்தனை நாளைக்குத்தான் அஸ்வினால் பொறுத்துக்கொள்ள முடியும்" என்றார். அவருடையப் பேட்டி, சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு விவாதப்பொருளாக மாறியது.
இந்த விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார் அஸ்வின்.
"என் தந்தை ஊடகங்களுக்குப் பேட்டியளித்துப் பழக்கப்பட்டவர் கிடையாது. அவரை எல்லோரும் மன்னித்து இனிமேல் இந்த விவகாரத்துடன் அவரைத் தொடர்புபடுத்த வேண்டாம்" என்று அஸ்வின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், "தகப்பா... என்ன இதெல்லாம்..." என்றும் நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார் அஸ்வின்.