வங்கதேச டெஸ்ட் தொடர்: 5 சாதனைகளை முறியடிக்க அஸ்வினுக்கு வாய்ப்பு!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நெ.1 இடத்தில் உள்ளார் அஸ்வின்.
அஸ்வின்
அஸ்வின்
1 min read

இந்தியா, வங்கதேசம் இடையிலான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (செப்டம்பர் 19) தொடங்குகிறது. முதல் டெஸ்ட் சென்னையிலும், இரண்டாவது டெஸ்ட் செப்டம்பர் 27-ல் கான்பூரிலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நெ.1 இடத்தில் இருக்கும் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இத்தொடரில் 5 சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்புள்ளது.

அதன் விவரங்கள்

* சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள்

இன்னும் 22 விக்கெட்டுகள் எடுத்தால் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர் எனும் சாதனையைப் படைப்பார் அஸ்வின். இந்தப் பட்டியலில் அனில் கும்ப்ளே 476 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

* வங்கதேசத்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள்

வங்கதேசத்துக்கு எதிராக இதுவரை 6 டெஸ்டில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இந்தப் பட்டியலில் ஜாகீர் கான் 31 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். எனவே இத்தொடரில் 9 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் இந்தச் சாதனையை முறியடிப்பார் அஸ்வின்.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இதுவரை 10 முறை ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இந்தப் பட்டியலில் அஸ்வினுடன் இணைந்து ஆஸ்திரேலியாவின் நேதன் லயனும் முதலிடத்தில் உள்ளார். எனவே வரவிருக்கும் தொடரில் ஒரு முறை ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அஸ்வின் இந்தப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுவார்.

* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள்

இந்தப் பட்டியலில் நேதன் லயன் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இதனை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும்14 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

* 2023-25 பருவத்துக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக விக்கெட்டுகள்

இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இதனை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 10 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in