நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும், குறிப்பாக பெண்களுக்கு என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் மௌமிதா கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து பல நகரங்களில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், “நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவே கூடாது” என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய வீரர் அஸ்வின், “கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்காக மருத்துவர்கள் ஒன்றிணைவதைப் பார்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.
நீதி கிடைப்பதில் தாமதம் ஆகலாம், ஆனால் கிடைக்காமலே போய்விடக்கூடாது என்று சொல்லுவார்கள். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நினைக்கிறேன். நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவே கூடாது.
நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும், குறிப்பாக பெண்களுக்கு” என்று பேசியுள்ளார்.