கோலி சுயநலமின்றி விளையாடினார்: அஸ்வின்

“2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு ஒரு பாடத்தைப் புகட்டினர்”.
கோலி
கோலிANI
1 min read

ஜடேஜா ஸ்டம்பை நோக்கி பந்துவீசியிருந்தால் இங்கிலாந்து அணி 80 ரன்களுக்குள் சுருண்டிருக்கும் என அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.

முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

அஸ்வின் பேசியதாவது:

“2022 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து வீரர்கள் இந்திய அணிக்கு ஒரு பாடத்தைப் புகட்டினர். இந்த ஆட்டத்தை பொறுத்தவரை 165 அடித்தால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியடையும் என என் நண்பரிடம் சொன்னேன்.

87 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கும் என எதிர்பார்த்தேன். ஜடேஜா சரியாக ஸ்டம்பை நோக்கி பந்துவீசியிருந்தால் இங்கிலாந்து அணி 80 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். இந்திய அணி தனது அணுகுமுறையிலிருந்து பின்வாங்கவே இல்லை.

கோலியின் ரசிகர்கள் அவர் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை என வருத்தப்படுகிறார்கள். ஆனால் கோலி சுயநலமின்றி விளையாடினார். அணிக்காக மட்டுமே விளையாடவேண்டும் என்ற நோக்கத்தில் ஆடுகளத்தின் சூழலைப் புரிந்து ஒரு சில ஷாட்டுகளை விளையாட முயற்சி செய்தார். அதன் மூலம் அடுத்து வரக்கூடிய அனைவரும் ஆட்டத்தை அதிரடியாக அணுகவேண்டும் என்ற எண்ணத்தையும் அவர் ஏற்படுத்தினார்” என்றார்.

இந்த ஆட்டத்தில் கோலி ஒரு சிக்ஸருடன் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in