
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியின் துணை கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி நவம்பர், டிசம்பர், ஜனவரியில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்து 5 டெஸ்டுகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. கடைசியாக 2023-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது. ஆஷஸை ஆஸ்திரேலியா தக்கவைத்தது.
2010/11-க்குப் பிறகு, ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸை வென்றதில்லை. இந்நிலையில் ஆஷஸை மீண்டும் கைப்பற்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்கிறது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஸ்டோக்ஸ், நவம்பர் 21 அன்று தொடங்கும் முதல் டெஸ்டுக்கு முன் முழு உடற்தகுதியை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து துணை கேப்டனாக ஆலி போப் செயல்பட்டு வந்தார். கடைசியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 5-வது டெஸ்டில் ஸ்டோக்ஸ் விளையாடாததால், போப் தலைமை பொறுப்பை ஏற்றார். கடந்த 14 மாதங்களில் ஸ்டோக்ஸ் இல்லாமல் 5 முறை இங்கிலாந்தை வழிநடத்தியுள்ளார் ஆலி போப். இதில் இங்கிலாந்து 3 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது.
கடைசியாக விளையாடிய இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் ஆலி போப் சதமடித்தாலும், டெஸ்ட் தொடரில் அவருடைய சராசரி வெறும் 34 மட்டுமே. எனவே, இவருடைய ஃபார்ம் கேள்விக்குறியாக இருந்தது.
இவர் விளையாடும் மூன்றாவது வரிசையில் களமிறங்க ஜேக்கப் பெத்தெல் தயார் நிலையில் உள்ளார். தற்போது ஆலி போப்பிடமிருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளதன் மூலம், ஜேக்கப் பெத்தெல் மூன்றாவது வரிசை பேட்டராக விளையாடுவது உறுதியாகிறது.
இங்கிலாந்து துணை கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளைப் பந்து கேப்டன் பொறுப்பிலிருந்து ஜாஸ் பட்லர் விலகிய பிறகு, ஒருநாள் மற்றும் டி20யில் ஹாரி புரூக் தான் இங்கிலாந்தை வழிநடத்தி வருகிறார். டெஸ்டிலும் 30 டெஸ்டுகளில் 57.55 சராசரியில் 2,820 ரன்கள் எடுத்துள்ளார். எனவே, துணை கேப்டன் பொறுப்பு பெரிய போட்டியின்றி ஹாரி புரூக் வசம் சென்றுள்ளது. பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழு உடற்தகுதியை அடையாததால், துணை கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரதான சுழற்பந்துவீச்சாளராக சோயிப் பஷீர் இருக்க, வில் ஜேக்ஸ் கூடுதல் சுழற்பந்துவீச்சாளராகச் சேர்க்கப்பட்டுள்ளது ஆச்சர்யமளித்துள்ளது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அதிரடி ஆல்-ரவுண்டரான இவர், இரு டெஸ்டுகள் மட்டுமே விளையாடியுள்ளார். 2022-க்குப் பிறகு டெஸ்டில் விளையாடவில்லை. ரெஹான் அஹமது, லியம் டாசன், ஜேக் லீச் ஆகியோர் மாற்று சுழற்பந்துவீச்சாளர்களாகத் தேர்வாகவில்லை.
கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. மேத்யூ பாட்ஸ், மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜாஷ் டங் உள்ளிட்டோர் வேகப்பந்துவீச்சாளர்களாக உள்ளார்கள். சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்குத் திரும்பியுள்ள மார்க் வுட் மட்டுமே வேகப்பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் பெற்றவர்.
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஜேக்கப் பெத்தெல், ஹாரி புரூக் (துணை கேப்டன்), பிரைடன் கார்ஸ், ஸாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜேக்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), ஜாஷ் டங், மார்க் வுட்.
ஆஷஸ் டெஸட் தொடர் அட்டவணை:
முதல் டெஸ்ட்: நவம்பர் 21-25 (பெர்த்)
2-வது டெஸ்ட்: டிசம்பர் 4-8 (பிரிஸ்பேன், பகலிரவு)
3-வது டெஸ்ட்: டிசம்பர் 17-21 (அடிலெய்ட்)
4-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30 (மெல்போர்ன்)
5-வது டெஸ்ட்: ஜனவரி 4-8 (சிட்னி)
Ashes | England Squad | Team England | Ben Stokes | Aus v Eng | Will Jacks | Ollie Pope | Harry Brook | Mark Wood |