ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் 92.97 மீ. தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு ரூ. 10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று கோலாகலமாகத் தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் ஈட்டி எறிதல் விளையாட்டின் இறுதிச் சுற்று நேற்று நடைபெற்றது.
இதில், பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீ. தூரம் வீசி புதிய ஒலிம்பிக்ஸ் சாதனையைப் படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
முன்னதாக, 2008 ஒலிம்பிக்ஸில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஆண்டிரியாஸ் 90.57 மீ. தூரம் வீசியதே ஒலிம்பிக்ஸ் சாதனையாக இருந்தது. தற்போது அதை முறியடித்து புதிய ஒலிம்பிக்ஸ் சாதனையைப் படைத்தார் அர்ஷத் நதீம்.
மேலும், ஒட்டுமொத்த பாகிஸ்தானின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்த அர்ஷத் நதீம் பாகிஸ்தானின் 32 வருட பதக்கக் கனவை நிறைவேற்றினார். பாகிஸ்தான் கடைசியாக 1992 ஒலிம்பிக்ஸில் பதக்கத்தை வென்றது.
பாகிஸ்தான் சார்பாக நடப்பாண்டு ஒலிம்பிக்ஸில் மொத்தம் 7 வீரர்களே பங்கேற்ற நிலையில் அர்ஷத் நதீமைத் தவிர மற்ற அனைவரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.
ஆனால், அர்ஷத் நதீம் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு ஒரு சிறப்பானச் சாதனையைச் செய்தார்.
மேலும், பாகிஸ்தானுக்காக ஒரு அணியாக இல்லாமல் தனித்து போட்டியிட்டு தங்கப் பதக்கம் வென்ற முதல் வீரர் எனும் சாதனையையும் படைத்தார்.
இந்நிலையில் அவரை கௌரவிக்கும் வகையில் ரூ. 10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அர்ஷத் நதீமின் சொந்த ஊரில் அவரது பெயரில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும் நவாஸ் கூறியுள்ளார்.
முன்னதாக, புது ஈட்டி கூட வாங்க வசதி இல்லாமல் இருந்த அர்ஷத் நதீம், கடினமாக உழைத்தால் நமக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்த்தியுள்ளார்.