
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20யுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் அறிவித்துள்ளார்.
டி20 ஜாம்பவான் ஆண்ட்ரே ரஸ்ஸல் (37) மேற்கிந்தியத் தீவுகளுக்காக 2010-ல் டெஸ்டில் தான் முதலில் அறிமுகமானார். இதுவே அவருடைய கடைசி டெஸ்ட். 2011-ல் தான் ஒருநாள் மற்றும் டி20யில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக அறிமுகமானார். 56 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள ரஸ்ஸல் 2019-க்கு பிறகு டி20யில் மட்டுமே விளையாடி வருகிறார்.
சர்வதேச டி20யில் 84 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 163.08 ஸ்டிரைக் ரேட்டில் 1,078 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் 61 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ள ரஸ்ஸல், இரண்டாவது டி20யுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஸ்ஸல் ஜமைக்காவைச் சேர்ந்தவர் என்பதால், ஜமைக்காவில் நடைபெறும் டி20யுடன் ஓய்வு பெறுகிறார்.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், ரஸ்ஸலின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிகோலஸ் பூரன் கடந்த மாதம் ஓய்வுபெற்ற நிலையில், ஆண்ட்ரே ரஸ்ஸலும் தற்போது ஓய்வை அறிவித்துள்ளது மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. ரஸ்ஸல் 2012 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம்பெற்றிருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மீதமுள்ள ஆட்டங்களில் ரஸ்ஸலுக்குப் பதிலாக மாற்று வீரராக மேத்யூ ஃபோர்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
Andre Russell | Jamaica | Windies | West Indies | Australia T20 | Australia T20 Series | Nicholas Pooran | International Cricket | Retirement | Retires