22 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது: ஆண்டர்சன் ஓய்வு

சச்சினுக்கு பிறகு அதிகமான டெஸ்டில் பங்கேற்ற வீரர் ஆண்டர்சன்.
ஆண்டர்சன்
ஆண்டர்சன்
1 min read

தனது கடைசி டெஸ்டில் 4 விக்கெட்டுகள் உட்பட டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக 704 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

2002 டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கடந்த 22 ஆண்டுகளில் இங்கிலாந்து அணிக்காக ஏராளமான சாதனைகளை ஆண்டர்சன் நிகழ்த்தியுள்ளார்.

அவற்றின் தொகுப்பு

* சச்சினுக்கு பிறகு அதிகமான டெஸ்டில் பங்கேற்ற வீரர் - 188 டெஸ்டுகள்.

* குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 2-வது இடம் - லார்ட்ஸ் மைதானத்தில் 123 விக்கெட்டுகள்.

* ஒரு இன்னிங்ஸில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தியவர்களில் பட்டியலில் 7-வது இடம்.

* டெஸ்டில் அதிக பந்துகளை வீசிய 4-வது வீரர் - 40037 பந்துகள்.

* விக்கெட் கீப்பரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் - 198 விக்கெட்டுகள்.

* டெஸ்டில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது பந்துவீச்சாளர் - 704 விக்கெட்டுகள்.

* நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடியவர்கள் பட்டியலில் 12-வது இடம்.

* மூன்று வடிவிலான கிரிக்கெட்டையும் சேர்த்து அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3-வது இடம் - 991 விக்கெட்டுகள்.

ஆண்டர்சன் பேசியதாவது

“நான் செய்த சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு அனைத்து வீரர்களும் சேர்ந்து என்னை வரவேற்ற விதம் சிறப்பாக இருந்தது. ரசிகர்களின் ஆதரவைப் பார்ர்கும்போது உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக 20 ஆண்டுகளுக்கு மேல் விளையாடியது சாதாரண விஷயம் அல்ல, எனவே இவ்வளவு தூரம் வந்ததை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது தான் உலகத்திலேயே சிறந்த வேலை. அதனை இவ்வளவு ஆண்டுகளாக செய்தது நெகிழ்ச்சியாக உள்ளது. இங்கிலாந்து அணியுடனான மறக்க முடியாத அனுபவங்கள் நிறைய உள்ளது. எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தினருக்கும். இத்தனை ஆண்டுகளில் பல திறமையான வீரர்களுடன் விளையாடியது என் அதிர்ஷ்டம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in