'நாளை என்று ஒன்று இருக்கிறது': காவ்யா மாறனுக்கு ஆறுதல் சொன்ன அமிதாப் பச்சன்

"தோல்விக்குப் பிறகு மிகவும் வருத்தப்பட்டு, தனது உணர்வை வெளிப்படுத்தாமல் இருக்க கேமிராக்களிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்ணீர் சிந்தினார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன்."
'நாளை என்று ஒன்று இருக்கிறது': காவ்யா மாறனுக்கு ஆறுதல் சொன்ன அமிதாப் பச்சன்
படம்: Screen Grab | SRH Twitter

ஐபிஎல் இறுதிச் சுற்று தோல்வியின் வருத்தத்தில் இருந்த காவ்யா மாறனைப் பார்த்து தான் வருத்தப்பட்டதாக அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாகக் கோப்பை வென்றது. இந்தத் தோல்விக்குப் பிறகு சன்ரைசர்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன், மைதானத்திலேயே தோல்வியின் விரக்தியில் கண்ணீர் சிந்தினார். காவ்யா மாறனின் இந்த செயல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமிதாப் பச்சன் தனது இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

"சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நல்ல அணி. மற்ற ஆட்டங்களில் (இறுதிச் சுற்று அல்லாமல்) அவர்களுடைய பிரமாண்ட செயல்பாடுகளை நாம் அனைவரும் பார்த்தோம். கவனிக்க வேண்டிய மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்னெவன்றால், அந்த அணியின் உரிமையாளர் இளம் பெண் காவ்யா மாறன். தோல்விக்குப் பிறகு மிகவும் வருத்தப்பட்டு, தனது உணர்வை வெளிப்படுத்தாமல் இருக்க கேமிராக்களிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்ணீர் சிந்தினார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். அன்புக்குரியவளே, நாளை என்று ஒன்று இருக்கிறது!" என்று அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தோல்வியின் விரக்தியில் தான் சோகமாக இருந்தாலும், இறுதிச் சுற்று வரை முன்னேறியதற்காக அணி வீரர்களை அவர் உற்சாகப்படுத்திய காணொளி இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டது. அணி வீரர்களிடம் பேசுகையில், "சோகமாக இருக்காதீர்கள். நாம் இறுதிச் சுற்றில் விளையாடியுள்ளோம். டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முறையை மாற்றியிருக்கிறீர்கள். எல்லோரும் நம்மைப் பற்றிதான் பேசுகிறார்கள்" என்றார் காவ்யா மாறன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in