
இந்திய வீரர் அமித் மிஸ்ரா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2003-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 42 வயது மிஸ்ரா, இந்தியாவுக்காக 22 டெஸ்டுகள், 36 ஒருநாள், 10 டி20களில் விளையாடியுள்ளார்.
ஹரியாணா அணிக்காக விளையாடி 2000-01-ல் உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமானார் லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா. அற்புதமாகப் பந்துவீசியதால் 2003-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமானார்.
டெஸ்டில் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் கோலோச்சிக் கொண்டிருந்ததால், 2008-ல் தான் இவருக்கான டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தது. 2008-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொஹாலி டெஸ்டில் அறிமுகமாகி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கும்ப்ளே காயத்தால் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
எனினும், சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தாததால், இவருக்கான வாய்ப்பும் தொடர்ச்சியாகக் கிடைக்கமால் போனது. 2013-ல் சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணியில் மிஸ்ரா இடம்பெற்றிருந்தார்.
ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது தில்லி கேபிடல்ஸ்), டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 2008, 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் மூன்று முறை ஹாட்ரிக் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக கடைசியாக 2017-ல் விளையாடினார். ஐபிஎல் போட்டியில் கடைசியாக 2024-ல் விளையாடினார். முதல் தர கிரிக்கெட்டில் 152 ஆட்டங்களில் 535 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 152 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் 252 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 22 டெஸ்டுகளில் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 36 ஆட்டங்களில் 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச டி20யில் 10 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டியில் 162 ஆட்டங்களில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது கடைசி ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அமித் மிஸ்ரா.
Amit Mishra | Amit Mishra retires | International Cricket |