
விராட் கோலிக்குப் பிடிக்காததன் காரணத்தாலேயே தான் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டதாக ராபின் உத்தப்பா கூறியதற்கு அம்பதி ராயுடு விளக்கமளித்துள்ளார்.
இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கடந்த ஜனவரியில் ஊடகம் ஒன்றிடம் பேசுகையில், "விராட் கோலிக்கு யாரையாவது பிடிக்கவில்லையெனில், ஒருவர் சிறப்பாக இல்லை என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டால், அவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் அம்பதி ராயுடு. அனைவருக்கும் விருப்பமுள்ளவர்கள் என்று இருப்பார்கள். ஆனால், அதற்காக ஒருவருடைய வாழ்கைக் கதவை மூடக் கூடாது. உலகக் கோப்பைக்கான சீருடை மற்றும் உலகக் கோப்பை சாதனங்கள் அனைத்தும் அம்பதி ராயுடுவின் வீட்டில் இருந்தன. உலகக் கோப்பையில் விளையாடவிருப்பதாக ஒருவர் நினைத்துக் கொண்டிருப்பார். ஆனால், அவருடையக் கதவை நீங்கள் மூடுவீர்கள். எனக்கு அது நியாயமாகப் படவில்லை" என்றார்.
இந்நிலையில் அம்பதி ராயுடு அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
"கோலிக்குப் பிடித்தமானவர்கள், பிடிக்காதவர்கள் என்ற எண்ணம் இருப்பதைச் சொல்லவே உத்தப்பா முயற்சித்திருக்கிறார். ஆனால், என்னுடைய விஷயத்தைப் பொறுத்தவரை கோலி எனக்கு நிறைய ஆதரவாக இருந்துள்ளார். அவருக்கு என்னைப் பிடிக்கும். அவருடையத் தலைமையில் இந்தியாவுக்காக நிறைய விளையாடியுள்ளோம். அவர்தான் என்னை இந்திய அணிக்குள் அழைத்து வந்தார். அவரும் எளிமையான பின்னணியிலிருந்து வந்தவர், அற்புதமான கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறார் என்பதால் போராட்டங்களைப் பற்றி அவருக்கும் தெரியும். தில்லியிலிருந்து வரும் பேட்டராக கிரிக்கெட்டில் ஜொலிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல" என்றார் ராயுடு.
மேலும், "விராட் கோலியின் தலைமைப் பண்பு என்பது சில நேரங்களில் போதுமானதாக இருக்காது. இது அனைவருக்கும் தெரியும். கோலி கேப்டனாக இருந்தபோது, அவர் சில தவறுகளைச் செய்ததாக உத்தப்பா குறிப்பிட்டார். இது அவருக்குப் பிடித்தமானவர், வேண்டப்பட்டவர் என்பதல்ல. குறிப்பிட்ட அந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சரியான முடிவாக இருக்காது என்பதுதான் விஷயம். 2019 உலகக் கோப்பை அணியிலிருந்து நான் நீக்கப்பட்டதற்கு விராட் கோலி அல்லது ரவி சாஸ்திரி அல்லது எம்எஸ்கே பிரசாத் ஆகியோரை நான் காரணம் கூற மாட்டேன். அது கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு. அணிக்கு வேறோர் அம்சம் சரியாக இருக்கும் என அவர்கள் நினைத்திருக்கிறார்கள். இது தனிநபர் சார்ந்தது அல்ல" என்றார் ராயுடு.