பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அமன் ஷெராவத் ஆட்டத்துக்கு முன்பாக 4.5 கிலோ எடையைக் குறைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதில், ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 13-5 என்ற கணக்கில் அமன் ஷெராவத் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்நிலையில் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.5 கிலோ எடையைக் குறைத்ததாகத் தகல்வகள் வெளியாகின.
இது குறித்து பிடிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அமன் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்துக்கு முன்பாக 61.5 கிலோ எடையுடன் இருந்தார். இது அவர் பங்கேற்கும் எடையை விட 4.5 கிலோ அதிகம்.
எனவே, 4.5 கிலோவை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் நீர்ச்சத்தை வெளியேற்ற நீராவி குளியல, ட்ரெட்மில் ஓட்டம், 5 முறை 15 நிமிட தொடர் ஓட்டம் போன்ற தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும் நள்ளிரவு முழுவதும் தூங்காமல் இருந்துள்ளார். தேன் கலந்த தண்ணீர் குடிப்பது, சிறிது அளவு காபி குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு இறுதியாக 56 கிலோ 900 கிராம் எடையுடன் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பங்கேற்றார்.
இதன் மூலம் அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.5 கிலோ எடையைக் குறைத்தார்.
முன்னதாக, மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னதாக 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.