
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சமன் செய்ய 5-வது டெஸ்டில் உதவி நட்சத்திரமாக ஜொலித்த முஹமது சிராஜின் சகோதரர் சிராஜ் குறித்து பேட்டியளித்துள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்த இந்திய அணி 5 டெஸ்டுகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடர் 2-2 என சமன் ஆனது. இந்தத் தொடரில் 5 டெஸ்டுகளிலும் முழுமையாக விளையாடிய ஒரே வீரர் முஹமது சிராஜ் தான். இந்தத் தொடரில் மொத்தம் 1,113 பந்துகளை வீசியுள்ளார் சிராஜ். அதிக பந்துகளை வீசியவர்களில் இவரே முதலிடம்.
லண்டன் ஓவலில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டெஸ்டின் கடை நாளில் மிக அற்புதமாகப் பந்துவீசி இந்தியாவுக்குத் தேவையான வெற்றியைத் தேடித் தந்தார் சிராஜ். அனைவரும் கொண்டாடும் நட்சத்திரமாக மாறினார்.
5-வது டெஸ்டுக்கு முன்பு சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என டேல் ஸ்டெயின் கணித்தார். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிராஜின் இந்தப் புகழுக்கு விராட் கோலியே காரணம் என்கிறார் சிராஜின் சகோதரர் முஹமது இஸ்மாயில்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குப் புறப்படும் முன் மறைந்த தனது தந்தையின் நினைவிடத்துக்குச் சென்றுள்ளார் முஹமது சிராஜ். 2021 ஆஸ்திரேலிய தொடரின்போது முஹமது சிராஜின் தந்தை முஹமது கௌஸ் காலமானார். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் முன்பு மற்றும் பங்கேற்று முடித்துவிட்டு திரும்பும்போது தந்தையின் நினைவிடத்துக்குச் செல்வதை சிராஜ் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் சிராஜின் சகோதரர் இஸ்மாயில் கூறியதாவது:
"அம்மா எப்போது சிராஜுக்காகப் பிரார்த்தனை செய்வார். அம்மாவின் பிரார்த்தனையில் நிறைய வலிமை இருக்கிறது. பெற்றோரின் ஆசியால் முஹமது சிராஜ் நல்ல மனநிலையில் இருக்கிறார், இந்தியாவுக்காகச் சிறப்பாகச் செயல்படுகிறார். அம்மாவிடம் ஆசியைப் பெற தினந்தோறும் அழைப்பார். மேலும் வளர்ச்சியடைந்து பெருமை சேர் என்றே அம்மா எப்போதும் கூறுவார்.
தந்தைக்காகவும் அவருடைய கனவுக்காகவும் விளையாட வேண்டும் என்று தான் சிராஜ் எப்போதும் கூறுவார். சிராஜின் உடற்தகுதி தற்போது வேறொரு கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்துக்கும் விராட் கோலி தான் காரணம். அவரிடமிருந்து தான் சிராஜ் உத்வேகத்தை எடுத்துக்கொள்கிறார். 2018 ஐபிஎல் சிராஜுக்கு மோசமானதாக அமைந்தது. விராட் கோலி தான் அப்போது சிராஜுக்கு உறுதுணையாக இருந்தார். சிராஜின் திறமையை உணர்ந்து ஆர்சிபி மற்றும் இந்திய அணியில் பல வாய்ப்புகளைக் கொடுத்தார். எல்லாப் புகழும் விராட் கோலிக்கே. தனது கிரிக்கெட் வாழ்க்கைக்காக விராட் கோலிக்குக் கடன்பட்டிருப்பதாக சிராஜ் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மையே. அவர் பிரியாணி பிரியர். தற்போது அவர் பிரியாணி சாப்பிடுகிறார், அதுவும் எப்போதாவது, விராட் கோலியிடமிருந்து உத்வேகமான பேச்சைக் கேட்டபிறகு தான்.
சிராஜ் தற்போது வேறொரு நிலையில் உள்ள வீரர். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் தேர்வு செய்யப்படாதபோது, சிராஜ் கோபமடைந்தார். மனமுடைந்துபோனார். ஆனால், வேறொரு மனிதராக மாறினார். பயிற்சிகளை அதிகரித்தார்.
சில கடுமையான பயிற்சிகள் இருந்தன. தற்போது இதற்கான பலன்கள் கண்முன் இருக்கின்றன. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி மற்றும் ஐபிஎல் போட்டி இடையே நிறைய நேரம் இருந்தது. இந்த நேரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பயிற்சியெடுக்க உதவியது. இதன்பிறகு, ஐபிஎல் போட்டியில் விளையாடினார். சிறப்பாகச் செயல்பட்டார். தற்போது இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்" என்றார் சிராஜின் சகோதரர் முஹமது இஸ்மாயில்.
Mohammed Siraj | Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Mohammed Siraj | Oval Test | 5th Test | India England Test Series | India tour of England | Virat Kohli | Kohli Siraj | Siraj Kohli