பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் அலீம் தார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஐசிசியின் சிறந்த நடுவர்களில் ஒருவரான அலீம் தார் 145 டெஸ்ட் மற்றும், 222 ஒருநாள் ஆட்டங்களில் நடுவராக பணியாற்றியுள்ளார். இதில், 4 முறை உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் பணியாற்றியதும் அடங்கும். கடைசியாக 2024 ஏப்ரல் மாதத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையிலான டி20 ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார்.
2009 முதல் 2011 வரை ஐசிசியின் சிறந்த நடுவருக்கான டேவிட் ஷெப்பர்ட் டிராபியை வென்றார் அலீம் தார். மேலும், ஐசிசி நடுவர்களின் எலைட் பேனல் குழுவில் இணைந்த முதல் பாகிஸ்தான் நடுவர் எனும் பெருமையை பெற்றார். இந்த குழுவில் 2002-ல் இணைந்த இவர் 2023 வரை செயல்பட்டார்.
மேலும், 1986 - 1998 வரை 17 முதல்தர ஆட்டங்கள் மற்றும் 18 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் விளையாடினார்.
இந்நிலையில் 2024 -25 பருவத்துக்கான பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அலீம் தார் அறிவித்துள்ளார்.
தனது ஓய்வுக்கு பிறகு அடுத்த தலைமுறையினரை வழிநடத்தும் வகையில் ஒரு ஆலோசகராக செயல்பட விரும்புவதாகவும் அலீம் தார் தெரிவித்துள்ளார்.