கேகேஆர் கேப்டனாக ரஹானே நியமனம்

வெங்கடேஷ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேகேஆர் கேப்டனாக ரஹானே நியமனம்
படம்: https://x.com/KKRiders
1 min read

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

வெங்கடேஷ் ஐயர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக இருந்தவர் ஷ்ரேயஸ் ஐயர். இவர் 2022-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டார். 2023 ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக இவர் விளையாடாததால், நிதிஷ் ராணா அணியை வழிநடத்தினார். 2024-ல் மீண்டும் ஐபிஎல் போட்டிக்குத் திரும்பிய ஷ்ரேயஸ் ஐயர், அந்த அணிக்குக் கோப்பையை வென்று கொடுத்தார்.

ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்பு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயஸ் ஐயர் தக்கவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏலத்துக்கு முன்பு கொல்கத்தா அணியால் ஷ்ரேயஸ் ஐயர் விடுவிக்கப்பட்டார். வீரர்களைத் தக்கவைப்பது அணி நிர்வாகம் சார்ந்தது மட்டுமல்ல, அது இருவழியைச் சார்ந்தது என அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் தெரிவித்தார். ஐபிஎல் ஏலத்தில் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஷ்ரேயஸ் தேர்வு செய்யப்பட்டார். அவரே அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயர் ரூ. 23.75 கோடிக்குத் தேர்வு செய்தது. அனுபவ வீரர் அஜிங்க்யா ரஹானேவை ரூ. 1.5 கோடிக்குத் தேர்வு செய்தது. ஐபிஎல் 2025-ல் கொல்கத்தா அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே அல்லது வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்படலாம் என்ற தகவல்கள் வந்தன. கேப்டனுக்கான போட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன் பெயர்களும் இருந்தன.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அஜிங்க்யா ரஹானேவை கேப்டனாக அறிவித்துள்ளது. துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே இருந்துள்ளார். இவருடைய தலைமையில் ராஜஸ்தான் அணி 24 ஆட்டங்களில் 9 வெற்றிகளைப் பெற்றது. எனினும், 2018-ல் இவருடையத் தலைமையில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்று வரை தகுதி பெற்றது.

அண்மைக் காலமாக உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ரஹானேவின் தலைமைப் பண்பு மிரட்டலாக உள்ளது. கடந்தாண்டு ரஞ்சி கோப்பையில் ரஹானே தலைமையிலான மும்பை அணி கோப்பையை வென்றது. மும்பை அணிக்கு 27 ஆண்டுகளுக்குப் பிறகு இரானி கோப்பையை வென்று கொடுத்தார் ரஹானே. நடப்பு ரஞ்சி பருவத்தில் மும்பையை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார்.

கொல்கத்தா அணி தனது முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை மார்ச் 22-ல் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் 20-க்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் மட்டும் இன்னும் கேப்டனை அறிவிக்காமல் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in