கோப்பையை வென்றவுடன் இப்படியே கொண்டாடலாம்: சொன்னதைச் செய்த ஷாருக் கான்

ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக ஹர்ஷித் ராணாவிற்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
ஹர்ஷித் ராணா
ஹர்ஷித் ராணா

ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் கைகளால் முத்தம் கொடுத்து கொண்டாடுவோம் என ஷாருக் கான் கூறியதாக ஹர்ஷித் ராணா பேசியுள்ளார்.

ஐபிஎல் 2024 கோப்பையை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மிக எளிதாக வென்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்றது. ஐபிஎல் கோப்பையுடன் கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் உட்பட கேகேஆர் வீரர்கள் அனைவரும் கைகளால் முத்தம் கொடுத்து கொண்டாடினர்.

இந்நிலையில் கோப்பையை வென்றவுடன் இப்படியே கொண்டாடலாம் என ஷாருக் கான் கூறியதாக ஹர்ஷித் ராணா பேசியுள்ளார். முன்னதாக, ஐபிஎல் போட்டியின் மூன்றாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் மயங்க் அகர்வால் அதிரடியாக விளையாடி 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷித் ராணா மயங்க் அகர்வாலை நோக்கி கைகளால் முத்தம் கொடுத்து அவரை முறைத்து பார்த்து கொண்டாடினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக ஹர்ஷித் ராணாவிற்கு ஆட்டத்தின் கட்டணத்திலிருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் ஐபிஎல் விதிமுறைகளை மீறியதாக ஹர்ஷித் ராணாவிற்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் ஹர்ஷித் ராணாவிடம், இவ்வாறு கொண்டாட வேண்டும் என முன்பே முடிவு செய்தீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஹர்ஷித் ராணா, “ஆமாம். எனக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட போது, நான் மிகவும் சோகமாக இருந்தேன். அப்போது ஷாருக் கான் என்னிடம் வந்து ‘ஐபிஎல் கோப்பையை வென்றவுடன் கைகளால் முத்தம் கொடுத்து கொண்டாடுவோம்’ என்றார். அதேபோல கோப்பையை வென்றவுடன் ஷாருக் கான் அவர்களுடன் சேர்ந்து கேகேஆர் வீரர்கள் அனைவரும் கைகளால் முத்தம் கொடுத்து கொண்டாடினோம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in