
கிளப் வளாகத்தை தந்தை இவான் ரோட்ரிக்ஸ் மத ரீதியில் பயன்படுத்தியதாகக் கூறி, அவரது மகளும், பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான ஜெமிமா ரோட்ரிக்ஸ் கர் ஜிம்கானா கிளப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2023-ல் மும்பையில் உள்ள பிரபல கர் ஜிம்கானா கிளப் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸை 3 வருடங்களுக்கு கிளப்பின் கௌரவ உறுப்பினராக்கி, அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.
ஆனால் ஜெமிமாவின் தந்தை இவான் ரோட்ரிக்ஸ் மத ரீதியில் கிளப்பை உபயோகப்படுத்தியதாகக் கூறி அவருக்கு வழங்கப்பட்ட கௌரவ உறுப்பினர் பதவியை தற்போது ரத்து செய்துள்ளது கிளப் நிர்வாகம். இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள கிளப்பின் நிர்வாக உறுப்பினர் ஷிவ் மல்ஹோத்ரா,
`அவரால் (ஜெமிமா) நாங்கள் பெருமையடைகிறோம். நாட்டுக்காக அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். ஆனால் கிளப்பின் அரங்கத்தில் அவரது தந்தை 35 கூட்டங்களை நடத்தியுள்ளார். ஜெமிமாவின் பெயரில் அரங்கத்தை முன்பதிவு செய்து, பிரதர் மேனுவேல் மினிஸ்ட்ரீஸ் என்ற அமைப்பு தொடர்ச்சியாக அங்கே கூட்டங்களை நடத்தியுள்ளது.
இதனால் கிளப்பின் பிற உறுப்பினர்களால் அரங்கத்தை முன்பதிவு செய்ய முடியாமல் போனது. அவரது தந்தை சலுகையை தவறாக பயன்படுத்தியுள்ளார். பி.வி. சிந்து, லியாண்டர் பயஸ் போன்றோர் எங்கள் கிளப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல விதிகள் இதில் மீறப்பட்டுள்ளன’ என்றார்.
ஆனால் கர் ஜிம்கானா கிளப்பின் தற்போதைய தலைவர் விவேக் தேவ்னானி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியவை பின்வருமாறு,
`கிளப்பின் புதிய நிர்வாகக் குழுவுக்கும், அறங்காவலருக்குமான தேர்தல்கள் இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற உள்ளன. இதன் மூலம் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்பதை தெரிந்துகொள்ளலாம். தவறு நடந்தது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.
சட்டவிதிகளுக்கு உட்பட்டு தங்களின் தனிப்பட்ட நிகழ்வுக்கு அரங்குகள் உள்ளிட்ட கிளப்பின் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். யாருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த சலுகையும் வழங்கப்படவில்லை’ என்றார்.