
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அண்மைக் காலமாக சண்டை நிலவி வருகிறது. பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்துவதும் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனிடையே, நவம்பர் இறுதியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை அணிகள் விளையாடும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்தச் சண்டை காரணமாக முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் பங்கேற்குமா என்ற கேள்வி இருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹரூன் ஆகிய மூன்று வீரர்கள் நட்பு ரீதியிலான கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடுவதற்காக அர்கன் மாவட்டத்திலிருந்து பக்டிகா மாகாணத்தின் தலைநகர் ஷாரனாவுக்குச் சென்றிருக்கிறார்கள். கிரிக்கெட்டை முடித்துக்கொண்டு இவர்கள் அர்கன் மாவட்டத்துக்குத் திரும்பியுள்ளார்கள். அப்போது தான் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள். கிரிக்கெட் வீரர்கள் உள்பட மொத்தம் 8 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்கள்.
இதன் எதிரொலியாக, நவம்பர் இறுதியில் பாகிஸ்தான் பங்குபெறும் முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடர் நவம்பர் 17 முதல் நவம்பர் 29 வரை பாகிஸ்தானின் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் நடைபெறவிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் இம்முடிவை எடுத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் உள்ளிட்ட வீரர்கள் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
Afghanistan Cricket | Afghanistan | Afghanistan Cricket Board | Pakistan | Pakistan Tri Series |