ஆஸ்திரேலியாவை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான்!

டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்!
வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்!ANI
1 min read

சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி.

டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 1 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, மே.இ. தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றன. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்த நிலையில், இன்று சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்கதேம் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு மெதுவான தொடக்கம் அமைந்தது. 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடரந்து வங்கதேசத்தின் அசத்தலான பந்துவீச்சால் திணறியது ஆப்கானிஸ்தான் அணி. அதிகபட்சமாக குர்பாஸ் 55 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற எவரும் பெரியளவில் ரன்கள் சேர்க்காத நிலையில், இறுதிக்கட்டத்தில் ரஷித் கான் அதிரடியாக மூன்று சிக்ஸர்கள் அடித்து 19 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

116 என்ற இலக்கை 12.1 ஓவர்களில் எட்டினால் அரையிறுதிக்குத் தகுதி பெறலாம் என்ற நிலையில் வங்கதேச அணி களமிறங்கியது. 12.1 ஓவர்களுக்குப் பிறகு வங்கதேசம் இலக்கை எட்டினால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது.

ஆரம்பம் முதல் லிட்டன் தாஸ் அதிரடியாக விளையாடினாலும், அவருடன் ஒரு நல்ல கூட்டணியை அமைக்க ஒருவர் கூட இல்லை. நவீன் உல் ஹக் மற்றும் ரஷித் கானின் சிறப்பான பந்துவீச்சால் ரன்களை எடுக்க தடுமாறியது வங்கதேச அணி.

இதனிடையே மழை பெய்த காரணத்தால் டிஎல்எஸ் முறைப்படி வங்கதேச அணிக்கு 19 ஓவர்களில் 114 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் ஓவருக்கு 10 ரன்கள் எடுத்து வங்கதேச அணி விளையாடினாலும், விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழுந்தது. இதனால் வங்கதேச அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.

8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வங்கதேசம், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை வெளியேற்றி டி20 உலகக் கோப்பையில் முதல்முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

அரையிறுதி ஆட்டங்கள்:

தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான் (வருகிற வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு)

இந்தியா vs இங்கிலாந்து (ஜூன் 27 அன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு)

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in