ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்த ஆப்கானிஸ்தான்

இந்த மைதானத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த அணிகள் அனைத்தும் தோல்வியடைந்ததாக டாம் மூடி கூறியபோதும், மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்த ஆப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையில் முதல் குரூப்பில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவும், ஆப்கானிஸ்தானும் கிங்ஸ்டௌனில் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இந்தப் பிரிவிலிருந்து இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்குத் தகுதி பெறுவது உறுதியாகும் என்ற நிலையில்தான் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்த மைதானத்தில் இதுவரை 3 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த அணிகள் அனைத்தும் தோல்வியடைந்ததாக டாம் மூடி கூறியபோதும், மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

தொடக்க பேட்டர்கள் ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் சூழலுக்கு ஏற்ப தொடக்கத்தில் நிதானம் காட்டினார்கள். கம்மின்ஸ் வீசிய 4-வது ஓவரிலும், ஹேசில்வுட் வீசிய 5-வது ஓவரில் குர்பாஸ் ஒரு சிக்ஸர் அடித்து அதிரடி காட்டினார். 6 ஓவர்களில் அந்த அணி 40 ரன்களை எட்டியது.

பவர்பிளேவுக்கு பிறகு பெரிய அதிரடி இல்லாதபோதிலும், இருவரும் விக்கெட்டை இழக்காமல் விளையாடினார்கள். 10 ஓவர்களில் 64 ரன்கள். நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் ஸாம்பாவாலும் ஆப்கன் தொடக்க பேட்டர்களை பிரிக்க முடியவில்லை. 14-வது ஓவரில் குர்பாஸ் - ஸத்ரான் இணை 100 ரன்களை எட்டியது. இந்த உலகக் கோப்பையில் மூன்றாவது முறையாக இருவரும் கூட்டணியாக 100 ரன்களைக் கடந்துள்ளார்கள்.

குர்பாஸ் 44-வது பந்தில் அரை சதம் அடித்தார். முதல் 15 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டை இழக்காமல் 109 ரன்கள் எடுத்தது. அரைசதம் அடித்த குர்பாஸ் ஸ்டாய்னிஸ் பந்தில் சிக்ஸர் அடித்து அதே ஓவரில் ஆட்டமிழந்தார். இவர் 49 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.

46 பந்துகளில் அரைசதம் அடித்த ஸத்ரான் (51) மற்றும் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் (2) ஆகியோரை ஸாம்பா ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

15 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் விளையாடியதால் கடைசி நேரத்தில் பெரிய அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் நடுவரிசை சீட்டுக்கட்டைப் போல சரிந்தது.

18-வது ஓவரின் கடைசிப் பந்தில் ரஷித் கானை வீழ்த்தினார் கம்மின்ஸ். கடைசி 4 ஓவர்களில் ஹேசில்வுட் வீசிய 19-வது ஓவரில் மட்டும் கரிம் ஜனத் ஒரு சிக்ஸரும், நபி ஒரு பவுண்டரியும் அடித்து 15 ரன்கள் சேர்த்தார்கள்.

கடைசி ஓவரை வீசிய கம்மின்ஸ், முதலிரு பந்துகளில் கரிம் ஜனத் மற்றும் குல்பதின் நைப் விக்கெட்டை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹாட்ரிக் எடுத்து சாதனை புரிந்தார்.

முஹமது நபி கடைசிப் பந்தை பவுண்டரியுடன் நிறைவு செய்ய 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியாவில் வழக்கம்போல டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் களமிறங்கினார்கள். முதல் ஓவரை வீசிய நவீன் உல் ஹக் மூன்றாவது பந்திலேயே ஹெட்டை போல்ட் செய்து டக் அவுட்டாக்கினார். தனது இரண்டாவது ஓவரில் கேப்டன் மிட்செல் மார்ஷ் விக்கெட்டையும் வீழ்த்தி நவீன் அற்புதமான தொடக்கத்தைத் தந்தார்.

பவர்பிளேயின் கடைசி ஓவரில் நபியை அறிமுகம் செய்ய, இவரும் முதல் பந்திலேயே டேவிட் வார்னரை வீழ்த்தி அசத்தினார். 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் எடுத்தது.

2023 உலகக் கோப்பையில் வான்கடேவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மொத்த ஆஸ்திரேலிய பேட்டர்களும் சொதப்ப, மேக்ஸ்வெல் தனி நபராகப் போராடி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று தந்தார். இதை அப்படியே கிங்ஸ்டௌனிலும் கண்முன் கொண்டு வரப் பார்த்தார் மேக்ஸ்வெல். ஸ்டாய்னிஸ் ஒத்துழைப்பு தர மேக்ஸ்வெல் சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து வந்தார்.

10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது.

11-வது ஓவரில் குல்பதின் நைப் அறிமுகம் செய்யப்பட்டார். ஷார்ட் பந்து மூலம் ஸ்டாய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த ஓவரில் டிம் டேவிட் விக்கெட்டை வீழ்த்தினார்.

மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கூடியது. நைப் பந்தில் சிக்ஸர் அடித்த மேக்ஸ்வெல் 35 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 36 பந்துகளில் 44 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில்தான் குல்பதின் நைப் பந்தை அடிக்கப் பார்த்து பாயிண்டில் கேடச் ஆனார் மேக்ஸ்வெல். இவர் 41 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் விக்கெட்டுக்கு பிறகு கடைசி நம்பிக்கையாக இருந்தது வேட் மற்றும் கம்மின்ஸ். இவர்களும் ரஷித் கான் மற்றும் நைப் பந்தில் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தார்கள்.

ஆஸ்திரேலியாவின் கடைசி நிலை பேட்டர்களால் வெற்றி இலக்கை நெருங்கக் கூட முடியவில்லை.

19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா. 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறும் முதல் வெற்றி இது.

இந்த வெற்றியின் அரையிறுதிக்கான வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தக்கவைத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?

  • வங்கதேசத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற வேண்டும்.

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற வேண்டும்.

  • ஒருவேளை இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 36 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இது நடக்கும்பட்சத்தில் இந்தப் பிரிவிலிருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழையும் ஆப்கானிஸ்தான்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in