தெ.ஆ. அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் சிறப்பானத் தொடக்கத்தை அமைத்துத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் சதம் அடித்தார். இது அவரின் 7-வது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் ஆட்டத்தில் அதிக சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
குர்பாஸ் 110 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 105 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் கூட்டணி அமைத்த ரஹ்மத் ஷா 66 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ஓமர்ஸாய் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். ஓமர்ஸாய் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது.
இதன் பிறகு விளையாடிய தெ.ஆ. அணியில் டோனி டி ஜோர்ஜி மற்றும் பவுமா தவிர வேறு யாரும் பெரியளவில் ரன்களை எடுக்கவில்லை. ரஷித் கான் மற்றும் கரோடியின் அபாரமான பந்துவீச்சில் 134 ரன்களுக்குச் சுருண்டது தெ.ஆ. அணி. பவுமா 38 ரன்களும், டோனி டி ஜோர்ஜி 31 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் 5 விக்கெட்டுகளும், கரோடி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதன் மூலம் தெ.ஆ. அணிக்கு எதிராக முதல்முறையாக ஒருநாள் தொடரை வென்று ஆப்கானிஸ்தான் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
முன்னதாக முதல் ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஆப்கானிஸ்தான். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் நாளை (செப். 22) நடைபெறவுள்ளது.