உலகமெங்கும் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்பதை விட நாட்டுக்காக விளையாடுவதற்கே முன்னுரிமை அளிப்பேன் என ஆடம் ஸாம்பா பேசியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக பிரபல ஆஸி. வீரர் ஆடம் ஸாம்பா, ஜபிஎல் போட்டியிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னதாக பேசிய அவர், “நாட்டுக்காக விளையாடுவதற்கே முன்னுரிமை அளிப்பேன்” எனக் கூறியுள்ளார்.
தி சிட்னி மார்னிங் ஹெரால்டுக்கு அளித்த பேட்டியில் ஸாம்பா பேசியதாவது: “ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வெட்டோரி, மெக்டொனல்ட், கம்மின்ஸ், மார்ஷ் ஆகியோரின் தலைமையில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு விளையாடுவதால் நன்றாக பணம் சம்பாதிக்கிறேன். எனவே நாட்டுக்காக விளையாடுவதற்கும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்கவே முன்னுரிமை அளிப்பேன். டி20 லீக் போட்டிகளில் விளையாடுவது சில நேரங்களில் நன்றாக இருக்கும். ஆனால், அது நான் ஆஸ்திரேலிய அணியினருடன் இருப்பது போல் இருக்காது” என்றார்.