அபிஷேக் சர்மா சதம்: 2-வது டி20யில் இந்தியா வெற்றி

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
அபிஷேக் சர்மா சதம்: 2-வது டி20யில் இந்தியா வெற்றி
2 min read

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வேவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது டி20 ஆட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக அணியில் சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

அபிஷேக் சர்மா முதல் ஓவரில் சிக்ஸர் அடித்து அதிரடியைத் தொடங்கினார். ஆனால், கேப்டன் கில் இரண்டாவது ஓவரிலேயே 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பவர்பிளேயில் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் சற்று திணறடித்தார்கள். 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது.

கூட்டணியைக் கட்டமைக்க திட்டமிட்டு ருதுராஜ் ஒத்துழைப்பு தர அபிஷேக் பவுண்டரிகளாக அடித்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 74 ரன்களை தொட்டது. ருதுராஜுன் அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து அவருடைய ஸ்டிரைக் ரேட்டை 100-ஐ தாண்டச் செய்தார்.

மியெர்ஸ் வீசிய 11-வது ஓவரில் அபிஷேக் சர்மா தனது ஐபிஎல் ருத்ரதாண்டவத்தைத் தொடங்கினார். இந்த ஓவரில் மட்டும் இவர் இரு சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகளை விளாச இந்திய அணிக்கு 28 ரன்கள் கிடைத்தன. 33-வது பந்தில் அரை சதத்தையும் எட்டினார்.

மின்னல் வேகத்தில் சதத்தை நெருங்கிய அபிஷேக் சர்மா, மசகட்ஸா ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 46-வது பந்தில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை எட்டினார். சதமடித்த இவர் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

14 ஓவர்களில் 147 ரன்கள் என அதிரடிக்கான சரியான அடித்தளத்துடன் இந்தியா இருந்தது. இதனால் சாய் சுதர்சன், ரியான் பராக்குக்கு முன்பு ரிங்கு சிங் களமிறக்கப்பட்டார்.

ருதுராஜ் கெயிக்வாட் 38 பந்துகளில் அரை சதம் அடித்தார். சடாரா வீசிய 18-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு இவரும் தன் பங்குக்கு ரன் ரேட்டை உயர்த்தினார்.

இதுவரை 14 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்த ரிங்கு சிங், கடைசி இரு ஓவர்களில் சிக்ஸர்களாக நொறுக்கினார். 19-வது ஓவரில் இரு சிக்ஸர்கள். கடைசி ஓவரை ருதுராஜ் கெயிக்வாட் பவுண்டரியுடன் தொடங்கினால், ரிங்கு சிங் இரு சிக்ஸர்களுடன் நிறைவு செய்தார்.

20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ருதுராஜ் கெயிக்வாட் 47 பந்துகளில் 77 ரன்களும், ரிங்கு சிங் 22 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தார்கள்.

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வேவுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் முகேஷ் குமார். இன்னசன்ட் கையா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால், பிரையன் பென்னட் இந்தியப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். 8 பந்துகளில் 26 ரன்களுக்கு விரைந்த இவரை முகேஷ் குமார் வீழ்த்தினார்.

இவருடைய விக்கெட்டுக்கு பிறகு ஜிம்பாப்வேயின் ஆட்டம் சரிந்து, இந்தியப் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தொடங்கியது. அவேஷ் கான் தனது முதல் ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 6 ஓவர்களில் 58 ரன்களை விளாசினாலும், 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஜிம்பாப்வே.

கேம்பெல் மற்றும் மத்வெரே கூட்டணி அமைத்தாலும், நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரவி பிஸ்னாய் சுழலில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கேம்பெல்.

முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்ததால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டுக்கு ஏற்ப பவுண்டரிகள் வரவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஆட்டம் மந்தமாகச் சென்றது.

ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணித் தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஸ்னாய் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in