யார் இந்த 'சிக்ஸர் வீரர்' அபிஷேக் சர்மா?

இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அபிஷேக் சர்மாவுக்கு அமர்களமாக அமைந்தது.
யார் இந்த 'சிக்ஸர் வீரர்' அபிஷேக் சர்மா?
ANI

16 பந்துகளில் அரை சதமெடுத்து டிராவிஸ் ஹெட் சாதனை செய்த சில நிமிடங்களில் அந்தச் சாதனையைச் சமன் செய்கிறார் அபிஷேக் சர்மா. இப்போது இருவரும் தான் வேகமாக அரை சதமெடுத்த சன்ரைசர்ஸ் பேட்டர்கள். மும்பைக்கு எதிராக சிக்ஸர் மழை பொழிந்து நம்பமுடியாத அளவுக்கு 277 ரன்கள் குவித்தது சன்ரைசர்ஸ். கிளாஸன் மீண்டும் சாதித்த மற்றுமொரு ஐபிஎல் ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவின் பங்களிப்பும் முக்கியமானது.

அபிஷேக் சர்மா ஐபிஎல் போட்டிக்குப் புதியவர் அல்லர். இது அவருடைய 7-வது வருடம். இன்று விளையாடியது 50-வது ஐபிஎல் ஆட்டம். எந்த டி20 அணியிலும் தொடக்க வீரராக விளையாடுவார், நடுவரிசையிலும் களமிறங்குவார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வேறு. டி20 அணிகள் விரும்பும் செல்லப்பிள்ளை அபிஷேக் சர்மா.

யு-19 அணிகளில் இடம்பெற்று முத்திரை பதித்ததுதான் அபிஷேக் சர்மாவை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

வினோ மன்கட் கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணிக்காக யு-19 போட்டியில் சதமடித்தார் அபிஷேக். 2016 யு-19 ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கி கோப்பையை வென்றார். எனினும் 2018 யு-19 உலகக் கோப்பை கேப்டன் பதவி, பிரித்வி ஷாவுக்குச் சென்றது. 2018 ஐபிஎல் போட்டியில் ரூ. 55 லட்சத்துக்கு அபிஷேக்கைத் தேர்வு செய்தது தில்லி.

ஆர்சிபிக்கு எதிராகத் தனது முதல் ஐபிஎல் ஆட்டத்திலேயே 19 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார். டிம் செளதிக்கு எதிராக மூன்று பந்துகளில் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரிகள் அடித்து பெரிய மேடையில் திறமையை வெளிப்படுத்தினார். ஆனாலும் தில்லி அணிக்கு அபிஷேகின் திறமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்த வருடமே டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸுக்குத் தாரைவார்த்துக் கொடுத்தது. கடைசியாக 2022 மெகா ஏலத்தில் அபிஷேக் சர்மாவை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ரூ. 6.50 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ்.

2022 ஐபிஎல்-லில் 14 ஆட்டங்களில் அபிஷேக்கை விளையாட வைத்தது சன்ரைசர்ஸ் நிர்வாகம். அவரும் நன்கு விளையாடி 426 ரன்கள் எடுத்தார். கடந்த வருடம் 11 ஆட்டங்களில் 226 ரன்கள் எடுத்தாலும் ஸ்டிரேக் ரேட் 143.95 என இருந்தது.

ஐபிஎல்-லில் அதிகமாகப் பந்துவீசியதில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகளில் ஆல்ரவுண்டராகவே அறியப்படுகிறார். பஞ்சாப் அணிக்காக டி20 ஆட்டங்களில் நிறைய ஓவர்கள் வீசியுள்ளார். 2022-23 சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணியின் முதல் ஓவரைத் தொடர்ந்து வீசியவர், அபிஷேக் சர்மா தான். 5.10 எகானமியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 89 டி20 ஆட்டங்களில் 7.10 எகானமியுடன் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரஞ்சியிலும் பந்துவீசி சில விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

எல்லா நிலைகளிலும் அபிஷேக் சர்மாவை அணிகள் பயன்படுத்துவதற்குக் காரணம், சுழற்பந்துவீச்சை கிளாஸன் போலவே அழகாக எதிர்கொள்வார். ஸ்டிரைக் ரேட் கட்டாயமாக உயரும்.

இந்த வருட சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி அபிஷேக் சர்மாவுக்கு அமர்களமாக அமைந்தது. லீக் சுற்றில் ஆந்திராவுக்கு எதிராக 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 275 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இதன்பிறகும் அபிஷேக்கின் ரன் வேட்டை தொடர்ந்தது. 82 (38), 53 (26), 112 (56) என லீக் ஆட்டங்களில் மேலும் அசத்தினார். அரையிறுதியில் தில்லிக்கு எதிராக 45 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். இறுதிச்சுற்றில் டக் அவுட் ஆனாலும் பஞ்சாப் அணி கோப்பையை வென்றது. அந்தப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 485 ரன்களுடன் 2-வது இடம் பிடித்தார் அபிஷேக். 192.46 என்கிற இவருடைய ஸ்டிரைக் ரேட்டை யாராலும் நெருங்க முடியவில்லை.

இன்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவின் வழக்கமான அதிரடியை மீண்டும் காண முடிந்தது. அறிமுக வீரர் மபாகவின் ஓவரில் இரு சிக்ஸர்கள், இரு பவுண்டரிகள் அடித்தார். 16 பந்துகளில் அரை சதமெடுத்து சன்ரைசர்ஸ் அணிக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தார்.

ஐபிஎல் போட்டியில் பல முக்கியமான ஆட்டங்களை அபிஷேக் விளையாடுகிறார். அதுவும் கடந்த மூன்று ஆண்டுகளில் பல முத்திரை ஆட்டங்களை விளையாடியிருக்கிறார்.

75(50) vs சிஎஸ்கே, 2022

67(36) vs தில்லி, 2023

65(42) vs குஜராத், 2022

63(23) vs மும்பை, 2024

55(34) vs ராஜஸ்தான், 2023

அபிஷேக் சர்மாவின் இன்றைய ஆட்டம் பல வண்ணக் கனவுகளை உண்டாக்குகிறது. இந்திய அணியில் எந்த நிலையிலும் விளையாடுகிற, 140 ஸ்டிரைக் ரேட்டை அசலாட்டாகக் கொண்டு வருகிற, நடு ஓவர்களில் சிக்ஸர்களைப் பறக்க விடுகிற, தேவைப்பட்டால் ஓரிரு ஓவர்களை வீசுகிற வீரருக்கு இனி நாம் தேடத் தேவையில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in