
இங்கிலாந்துக்கு எதிரான மும்பை டி20யில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா, எல்லாவற்றுக்கும் யுவ்ராஜ் சிங் தான் காரணம் என அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் தொடக்க பேட்டராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசினார். 18-வது ஓவர் வரை களத்தில் நின்று சிக்ஸர்களை நொறுக்கித் தள்ளிய அவர் 54 பந்துகளில் 13 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் விளாசினார்.
சர்வதேச டி20யில் இந்திய வீரர் ஒருவரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் என்ற ஷுப்மன் கில் சாதனையை முறியடித்துள்ளார். சர்வதேச டி20யில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், யுவ்ராஜ் சிங்கின் பங்களிப்பு குறித்து பேசினார்.
"பயிற்சியின்போது கவனம் மிகத் தெளிவாக இருக்கும். இது மாதிரியான விஷயங்களை யுவ்ராஜ் சிங் 3, 4 ஆண்டுகளுக்கு முன்பே என்னுள் விதைத்து விட்டார். யுவ்ராஜ் சிங் தான் என் மீது நம்பிக்கை வைத்தார். யுவ்ராஜ் சிங்கைப் போல ஒருவர், நீ நாட்டுக்காக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித் தருவாய் என்று சொல்லும்போது, இயல்பாகவே நாம் நாட்டுக்காக விளையாடுவோம், நம்மால் முடிந்த உழைப்பைச் செலுத்துவோம் என்ற எண்ணம் நம்முள் வந்துவிடும்.
என்னுடையக் கிரிக்கெட் வாழ்க்கையில் யுவ்ராஜ் சிங் மற்றும் பஞ்சாப் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபருக்கு முக்கியப் பங்கு உள்ளது. அவர்கள் அதைத் தொடர்ந்து செய்யவுள்ளார்கள். ஆனால் நான் முன்பே சொன்னதுபோல, இவை எல்லாவற்றுக்கும் யுவ்ராஜ் சிங் தான் காரணம்.
கடந்த காலங்களிலும், ஒவ்வொரு இன்னிங்ஸும் முடிந்த பிறகும், அவர் என்னை நடத்திய விதம் என்பது... அவர் எப்போதுமே எனக்காக இருந்துள்ளார். நான் எப்போதும் கவனிப்பது அவர் ஒருவர் சொல்வதை தான். என்னைவிட அவருக்கு தான் என்னைப் பற்றி நன்கு தெரியும் என நினைக்கிறேன். நான் அதை நம்புகிறேன்" என்று அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார்.