
ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அனியால் ரூ. 14 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட அபிஷேக் சர்மா சையத் முஷ்டாக் அலி கோப்பை ஆட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாப்- மேகாலயா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மேகாலயா அணி 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 9.3 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் தனது சதத்தை நிறைவுசெய்த அபிஷேக் சர்மா, ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்தார்.
சமீபத்தில் 28 பந்துகளில் சதமடித்தார் குஜராத்தைச் சேர்ந்த உர்வில் படேல். டி20 கிரிக்கெட்டில் இது 2-வது விரைவான சதம். இந்தச் சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார்.
மேலும், சையத் முஷ்டாக் கோப்பைப் போட்டியில் தனது 4-வது சதத்தை அடித்து, இப்போட்டியில் அதிக சதம் அடித்தவர் என்கிற மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் அபிஷேக் சர்மா.