
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், அந்த அணியின் பயிற்சியாளராகச் செயல்படுவது குறித்து மனம் திறந்துள்ளார்.
தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் போட்டியில் 2008 முதல் 2011 வரை தில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். 2011-க்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.
2021-ல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஐபிஎல் போட்டிக்கு மீண்டும் திரும்புவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.
ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர் கூறியதாவது:
"எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டியில் நான் வேறொரு பணியின் மூலம் பங்கெடுப்பேன். ஆனால், ஒரு பருவம் முழுக்க தொழில்முறையாக உறுதிகொண்டு இருக்க வேண்டும் என்பது சவாலானது. அந்த நாள்கள் கடந்துவிட்டன என நினைக்கிறேன். அதற்காக இது மாறவே மாறாது என்றில்லை.
என் மனம் எப்போது ஆர்சிபியுடன் தான் உள்ளது. எப்போதும் ஆர்சிபியுடன் தான் இருக்கும். எனவே, எனக்கு ஏதேனும் பணி (பயிற்சியாளர், ஆலோசகர்) இருப்பதாக அணி நிர்வாகம் உணர்ந்தால், அதற்கான சரியான நேரம் அமையும் பட்சத்தில் நான் தயாராக இருந்தால், நிச்சயமாக ஆர்சிபி-க்கு வருவேன்" என்றார் டி வில்லியர்ஸ்.
ஆர்சிபிக்காக 157 ஆட்டங்களில் 4,522 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய சராசரி 41.10, ஸ்டிரைக் ரேட் 158.33. ஆர்சிபிக்காக இரு சதங்கள் மற்றும் 37 அரை சதங்கள் விளாசியுள்ளார். இவர் ஆர்சிபியின் ஹால் ஆஃப் ஃபேமில் 2022-ல் இணைக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி கோப்பை வென்றபோது, இறுதிச் சுற்றில் மைதானத்துக்கு வருகை தந்திருந்தார். விராட் கோலி உள்ளிட்டோருடன் வெற்றியைக் கொண்டாடினார்.
AB De Villiers | Royal Challengers Bengaluru | RCB | IPL |