பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அக்யூப் ஜாவெத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி வரை பாகிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்யூப் ஜாவெத் செயல்படுவார்.
சாம்பியன்ஸ் கோப்பை முடிவதற்குள் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான நிரந்தரப் பயிற்சியாளரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
ஜேசன் கில்லெஸ்பி தொடர்ந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கவுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை வரை ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்படுமாறு கில்லெஸ்பியை அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இதற்காக ஒப்பந்தத்தில் எதுவும் மாற்றம் செய்யப்படாமல் அதே ஊதியத்துக்கு இந்தப் பணியைச் செய்யுமாறு கில்லெஸ்பி அறிவுறுத்தப்பட்டுள்ளார். கில்லெஸ்பி இதை ஏற்க மறுத்துள்ளார்.
இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக அக்யூப் ஜாவெத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரி கிர்ஸ்டன் ராஜினாமாவுக்குப் பிறகு, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு நிலையான பயிற்சியாளர் இல்லாமல் பாகிஸ்தான் தடுமாறி வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான். டி20 தொடரை இழந்தது. அடுத்து நவம்பர் 24 முதல் டிசம்பர் 5 வரை ஜிம்பாப்வேவுக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் தலா மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டிக்கு முன்னதாக, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் விளையாடுகிறது.