
டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள விராட் கோலிக்கு அவருடைய ஆதர்ச நாயகன் சச்சின் டெண்டுல்கர் உணர்வுபூர்மாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர் விராட் கோலி டெஸ்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை காலை அறிவித்தார். சச்சின் டெண்டுல்கரை ஆதர்ச நாயகனாகக் கொண்டுள்ள விராட் கோலி, அவர் விட்ட இடத்திலிருந்து இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் சென்றார். பெரும் புகழுக்குரிய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டுள்ள விராட் கோலிக்கு ஏராளமானோர் வாழ்த்துகளைக் கூறி வருகிறார். இவற்றில் சச்சின் டெண்டுல்கரின் வாழ்த்து என்றும் தனித்துவமானது.
விராட் கோலிக்கு வாழ்த்து கூறிய சச்சின் டெண்டுல்கரும் 12 வருடங்களுக்கு முன்பு கோலி செய்த செயலை நினைவுகூர்ந்து உணர்வுபூர்மாக பதிவிட்டுள்ளார்.
"டெஸ்டிலிருந்து நீ ஓய்வுபெற்ற இந்நேரத்தில், 12 வருடங்களுக்கு முன் என்னுடைய கடைசி டெஸ்டின்போது நீ செய்த செயல் ஒன்று நினைவுக்கு வருகிறது. மறைந்த உன் தந்தையின் கயிறு ஒன்றை நீ எனக்கு அளித்தாய். மிகவும் தனிப்பட்ட முறையில் என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஆனால், உன்னுடைய செயல் மனதை நெகிழச் செய்தது. அன்று முதல் அது என்னுள் தங்கிவிட்டது. உனக்குக் கொடுக்க பதிலுக்கு என்னிடம் கயிறு எதுவும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஆழ்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உள்ளது.
எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டை தேர்வு செய்வதற்கான பெரும் உந்துதலாக நீ இருந்துள்ளாய். அதுதான் உன் நிஜ பாரம்பரியம். எப்பேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நீ கொண்டிருக்கிறாய். இந்திய கிரிக்கெட்டுக்கு ரன்களைவிட நிறைய கொடுத்துள்ளாய். பற்றுகொண்ட புதிய தலைமுறை ரசிகர்கள் மற்றும் வீரர்களைக் கொடுத்துள்ளாய். மிகச் சிறப்பான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள்" என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.