
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முயற்சியை ரசிகர்கள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். தொடரின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இங்கிலாந்துக்கு எதையும் எளிதாக அவர்கள் வழங்கிவிடவில்லை. போராடும் குணம் ஒவ்வொரு இந்திய வீரரிடமும் வெளிப்பட்ட டெஸ்ட் தொடர் இது.
2-வது நாள் முடிவில் 75/2 என இருந்த இந்திய அணி கடைசியில் கிட்டத்தட்ட 400 ரன்களைக் குவிக்கும் எனப் பலரும் எண்ணியிருக்க முடியாது.
கடைசி 6 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் மட்டுமே எடுத்த ஜெயிஸ்வால், தன் திறமையை முக்கியமான தருணத்தில் மீண்டும் நிரூபித்தார். நைட்வாட்ச்மேனான ஆகாஷ் தீப் நம்பமுடியாத விதத்தில் இன்று தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். முதல்தர கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்திருந்தவர் இன்று இங்கிலாந்துப் பந்துவீச்சைத் துணிச்சலாக எதிர்கொண்டார். பவுண்டரிகளை அடித்துக்கொண்டே இருந்து, இங்கிலாந்து வீரர்களை வெறுப்பேற்றினார். ஜெயிஸ்வால் - ஆகாஷ் தீப் 100 ரன்கள் கூட்டணி அமைத்து ஆட்டத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
இதன்பிறகு ஷுப்மன் கில், கருண் நாயர் ஆகிய இருவரும் தடுமாற்றத்துடன் விளையாடி முறையே 11, 17 ரன்கள் எடுத்து ஏமாற்றினார்கள். 127 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 118 ரன்கள் எடுத்து ஜெயிஸ்வால் ஆட்டமிழந்தபோது 250 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது இந்தியா. இந்த இளம் வயதில் பொறுப்புடன் விளையாடும் ஜெயிஸ்வாலின் எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதை இந்தத் தொடரும் நிரூபித்துள்ளது. இதன்பிறகு ஜடேஜா, ஜுரெல், வாஷிங்டன் ஆகியோர் கவனமாக விளையாடி மேலும் ரன்கள் சேர்த்தார்கள். ஜடேஜா 53 ரன்களும் ஜுரெல் 34 ரன்களும் எடுத்தார்கள். கடைசி விக்கெட்டுக்கு பிரசித் கிருஷ்ணாவுடன் ஜோடி சேர்த்த வாஷிங்டன் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து இந்தியா ஏறத்தாழ 400 ரன்கள் முன்னிலை பெற உதவினார். கடைசி விக்கெட்டுக்கு பிரசித்துடன் இணைந்து 39 ரன்கள் எடுத்தார் வாஷிங்டன்.
இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, டக்கெட்டும் கிராலியும் மீண்டும் அற்புதமான தொடக்கத்தை இங்கிலாந்துக்கு அளித்தார்கள். 13 ஓவர்களில் இக்கூட்டணி 50 ரன்கள் சேர்த்தது. எனினும் 3-வது நாளின் கடைசி ஓவரில் அட்டகாசமான பந்தில் 14 ரன்கள் எடுத்திருந்த கிராலியை போல்ட் செய்து நல்ல உணர்வுகளுடன் இன்றைய நாளை முடித்தார் சிராஜ். டக்கெட் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார்.