இங்கிலாந்து 669 ரன்கள் குவிப்பு: போராடும் ராகுல், கில்!

4-வது நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 137 ரன்கள் பின்தங்கியுள்ளது.
கேஎல் ராகுல்
கேஎல் ராகுல்ANI
1 min read

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் முடிந்தபோது இந்திய அணி எப்படி தோல்வியைத் தவிர்க்கப் போகிறது என்கிற கேள்வி எழுந்தது. முதல் ஓவரில் இரு இந்திய விக்கெட்டுகள் விழுந்தபிறகு 4-வது நாளிலேயே டெஸ்ட் முடியுமா என்கிற அடுத்தக் கேள்வி எழுந்தது. ஆனால் 4-வது நாள் முடிவில் நிலைமையை ஓரளவு சீராக்கியுள்ளார்கள் ஷுப்மன் கில்லும் கேஎல் ராகுலும். இப்போது, டிராவாது ஆகட்டும் என்கிற சமாதான நிலைக்கு வந்துள்ளார்கள் இந்திய ரசிகர்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்டில் இன்றும் இங்கிலாந்து சிறப்பாக பேட்டிங் செய்தது. ஸ்டோக்ஸ் தொடர்ந்து கவனமாக விளையாடி தன்னுடைய 14-வது டெஸ்ட் சதத்தை அடித்தார். மேலும் ஒரே டெஸ்டில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்த முதல் இங்கிலாந்து கேப்டன் என்கிற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்பு - கேரி சோபர்ஸ், டெனிஸ் அட்கின்சன் (மே.இ. தீவுகள்), முஷ்டாக் முஹம்து, இம்ரான் கான் (பாகிஸ்தான்) என 4 கேப்டன்கள் மட்டுமே ஒரே டெஸ்டில் சதமும் 5 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். 141 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்தில் வீழ்ந்தார் ஸ்டோக்ஸ். லியம் டாசன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு பிரைடன் கார்ஸ், வேகமாக ரன்கள் சேர்த்து கடைசியாக 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கியது. ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மான்செஸ்டர் மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் இது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 48 டெஸ்டுகளில் முதல்முறையாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களைக் கொடுத்துள்ளார் பும்ரா. 33 ஓவர்களில் 112 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

டெஸ்டை டிரா செய்யும் நோக்கத்துடன் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயிஸ்வாலும் சாய் சுதர்சனும் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் நம்பிக்கை இழந்தார்கள்.

ஆனால் ராகுலும் ஷுப்மன் கில்லும் நிலைமையைச் சரிசெய்ய கடுமையாக முயன்றார்கள். மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் தடுமாறிய இங்கிலாந்து அணி உத்திகளை மாற்றியது. லெக் சைடில் ஃபீல்டர்களை நிரப்பி அழுத்தம் கொடுத்தது. நிதானமாகவும் கண்ணும் கருத்துமாகவும் விளையாடி எல்லாவிதமான தாக்குதல்களையும் வீழ்த்தினார்கள் ராகுலும் ஷுப்மன் கில்லும்.

4-வது நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 137 ரன்கள் பின்தங்கியுள்ளது. கேஎல் ராகுல் 87, கில் 78 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

5-வது நாளிலும் நிலைமையைச் சமாளிக்குமா இந்தியா?

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in