இது ஜடேஜாவின் ஆட்டம்: சொந்த மண்ணில் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி!

தோனியின் தலைமையில் சிஎஸ்கே விளையாடியது போல அணியை அருமையாக வழிநடத்தினார் ருதுராஜ்.
இது ஜடேஜாவின் ஆட்டம்: சொந்த மண்ணில் சிஎஸ்கேவுக்கு ஹாட்ரிக் வெற்றி!
ANI

ஆட்டம் தொடங்கும் முன்பு 200 ரன்களை இலகுவாக எடுக்க முடியும் என்று கணிக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கேகேஆர் அணியால் 137/9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதுதான் சேப்பாக்கத்தின் அசல் ஆடுகளம் என்று அனைவரும் எண்ணிய ஓர் அட்டம். திடீரென்று வெளியூர்களில் இரு தோல்விகளைக் கண்ட சிஎஸ்கே அணி, ரசிகர்களுக்குப் பதற்றத்தை அளித்தது. ஆனால் இன்றைய வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் வசதியாக 4-வது இடத்தில் ஜம்மென்று அமர்ந்திருக்கிறது சிஎஸ்கே.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன் நீண்ட பேட்டிங் வரிசை, இலக்கை விரட்ட மிகவும் வசதியாகும் என்பதால் எளிதான முடிவு இது. ஷர்துல், முஸ்தஃபிஸுர், ரிஸ்வி அணியில் மீண்டும் இடம்பெற்றார்கள்.

ஐபிஎல் 2024 போட்டியில் கேகேஆர் தொடக்க வீரர்கள், 137 பந்துகளில் 236 ரன்கள் எடுத்து எதிரணிகளுக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டிருந்த வேளையில் இன்று முதல் பந்திலேயே பில் சால்டை டக் அவுட் செய்து சிஎஸ்கே ரசிகர்களைக் குஷிப்படுத்தினார் துஷார் தேஷ்பாண்டே. ஆனால் அவருடைய அடுத்த ஓவரில் இரு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் நரைன். தீக்‌ஷனாவின் முதல் ஓவரில் இரு சிக்ஸர்கள் பறந்தன. பவர்பிளேயில் அழகாக 56/1 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. இதற்குப் பிறகு தான் ஆட்டம் மாறத் தொடங்கியது.

பவர்பிளே முடிந்தவுடன் ஜடேஜா பந்தில் ரகுவன்ஷி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நரைனை 27 ரன்களில் வீழ்த்தினார் ஜடேஜா. இந்த ஓவரில் விழுந்த கேகேஆரால் இதன்பிறகு மீண்டு எழ முடியவேயில்லை. தனது அடுத்த ஓவரில் 3 ரன்களில் வெங்கடேஷ் ஐயரை வெளியேற்றினார் ஜடேஜா. 9-வது ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்ததால் ரஸ்ஸல், ரிங்கு சிங்கை களமிறக்காமல் ரமண்தீப் சிங்கை உள்ளே அனுப்பியது கேகேஆர். பவர்பிளேயில் கேகேஆர் பக்கம் சாய்ந்த ஆட்டத்தை 10 ஓவர்களில் 70/4 என தன் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தது சிஎஸ்கே. நடு ஓவர்களில் 33 பந்துகளுக்கு பவுண்டரி அடிக்க விடாமல் பார்த்துக்கொண்டது. ஆட்டத்தின் திருப்புமுனை இந்தக் கட்டம் தான்.

ரமண்தீப் சிங்கும் ஒரு சிக்ஸர் அடித்து தீக்‌ஷனா பந்தில் போல்ட் ஆனார். 12-வது ஓவரிலேயே ரிங்கு சிங் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து சேப்பாக்கத்தில், சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்தார் ஜடேஜா. சூழல் காரணமாக ஸ்ரேயஸ் ஐயர் மெதுவாக ரன்கள் சேர்த்தார். கேகேஆர், 15.2 ஓவர்களில் தான் 100 ரன்களைத் தொட்டது. மெதுவான பந்தில் போல்ட் ஆகி, 9 ரன்களுடன் வெளியேறினார் ரிங்கு சிங். அடுத்து, ரஸ்ஸல் வந்தார். இது அவருடைய 420-வது டி20 இன்னிங்ஸ். 2 பவுண்டரிகள் அடித்துவிட்டு, 10 பந்துகளில் 10 ரன்களுடன் தேஷ்பாண்டே பந்தில் ஆட்டமிழந்தார். அவருடைய அதிரடி ஆட்டத்துக்கான ஆடுகளம் அல்ல என்பதால் அவரால் இயல்பு ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது. ஒருவழியாக மறுமுனையில் நிதானமாக விளையாடி, கடைசி வரை வந்த ஸ்ரேயஷ் ஐயர், 34 ரன்களில் கடைசி ஓவரில் முஸ்தஃபிஸுர் பந்தில் ஆட்டமிழந்தார். கேகேஆர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. தோனியின் தலைமையில் சிஎஸ்கே விளையாடியது போல அணியை அருமையாக வழிநடத்தினார் ருதுராஜ்.

சிஎஸ்கேவுக்கு இந்தமுறையும் நல்ல தொடக்கம் அமையவில்லை. ரச்சின் ரவீந்திரா, ஸ்டார்க் ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து 15 ரன்களில், வருண் அரோரா பந்தில் ஆட்டமிழந்தார். ருதுராஜின் நல்ல ஐபிஎல் ஆட்டத்தைப் பார்த்து எத்தனை நாள் ஆச்சு என்று வருத்தப்பட்டவர்களுக்கு இன்று நல்ல விருந்தைப் படைத்தார். அனுகுல் ராய் ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து, இன்று தன்னுடைய நாள் என்கிற தகவலை கேகேஆர் அணிக்கு அனுப்பினார். பவர்பிளேயில் சிஎஸ்கே 52/1 என நல்ல நிலைமையில் இருந்தது.

ருதுராஜ் - மிட்செல் இணை, நடுவில் 16 பந்துகளுக்கு பவுண்டரி எதுவும் எடுக்காமல் விளையாடினாலும் ரன்ரேட் பெரிதாகக் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். 11 ஓவர்களில் 89/1 எனப் பாதுகாப்பான நிலைமையிலேயே இருந்தது சிஎஸ்கே. இன்னும் நிறைய ரன்கள் அடிப்பார் என எதிர்பார்த்த மிட்செல், 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷிவம் டுபே களமிறங்கினார்.

இந்திய டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என அனைவரும் விரும்பும் ஷிவம் துபே, 3 சிக்ஸர்களை அடித்து 18 பந்துகளில் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கெயிக்வாட், 45 பந்துகளில் ஒரு சிக்ஸரும் அடிக்காமல் அரை சதம் கடந்தார். ஆச்சர்யமாக, வெற்றிக்கு இன்னும் 3 ரன்களே தேவை என்கிற நிலையில் ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் தோனி களமிறங்கினார். ஒரு ரன் எடுத்தார்.

சிஎஸ்கே அணி, 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து சொந்த மண்ணில் இந்த வருடம் ஹாட்ரிக் வெற்றியை அடைந்தது. ருதுராஜ் 67 ரன்களுடனும் தோனி 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in