
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் ஆட்டம் கட்டாக்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து மீண்டும் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் விராட் கோலி வந்ததையடுத்து, யஷஸ்வி ஜெயிஸ்வால் நீக்கப்பட்டார். ஷுப்மன் கில் தொடக்க பேட்டராக களமிறங்கினார். வருண் சக்ரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு மார்க் வுட், கஸ் அட்கின்சன் மற்றும் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டார்கள்.
இங்கிலாந்துக்கு இந்த முறையும் ஃபில் சால்ட், பென் டக்கெட் இணை அட்டகாசமான தொடக்கத்தைத் தந்தது. முதல் பவர்பிளேயில் இங்கிலாந்து 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்தது. 36 பந்துகளில் டக்கெட் அரை சதம் அடித்தார். மறுமுனையில் கூட்டணிக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடி வந்த ஃபில் சால்ட், வருண் சக்ரவர்த்தி சுழலில் ஆட்டமிழந்தார்.
ரவீந்திரா ஜடேஜா வீசிய முதல் ஓவரிலேயே டக்கெட் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடக்க பேட்டர்கள் நல்ல ரன்ரேட்டில் விளையாடியதால் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் நிதானமாக சிறப்பான கூட்டணியை அமைத்தார்கள். 31 ரன்கள் எடுத்த புரூக், ஹர்ஷித் ராணா வேகத்தில் வீழ்ந்தார். 3-வது விக்கெட்டுக்கு ரூட் - புரூக் இணை 66 ரன்கள் சேர்த்தது.
ரூட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் அனுபவ பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். ரூட் 60 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 330 ரன்களை விளாசுவதற்கான சரியான அடித்தளம் அமைந்திருந்தது. ஆனால், பட்லர் 34 ரன்களுக்கும் ரூட் 69 ரன்களுக்கும் குறுகிய இடைவெளியில் ஆட்டமிழந்தார்கள்.
லியம் லிவிங்ஸ்டன் மட்டும் 32 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து கடைசியில் அதிரடி காட்டினார். இந்த முறையும் 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்யாத இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
305 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கேப்டன் ரோஹித் சர்மா, துணை கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினார்கள். அட்கின்சன் வீசிய 2-வது ஓவரில் ரோஹித் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். 2023 உலகக் கோப்பையில் பார்த்த பழைய ரோஹித் திரும்பியது இந்த ஓவரில் தெரிந்தது. இதன்பிறகு, ரோஹித் சர்மாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்திய அணி 7-வது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது.
பவர்பிளேயில் சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தியும், பலனில்லை. 30 பந்துகளில் அரைசதம் அடித்தார் ரோஹித் சர்மா. ஷுப்மன் கில் கூட்டணிக்குக் கச்சிதமாக ஒத்துழைப்பு தர, இந்திய அணி 14-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. ஷிப்மன் கில்லும் 45 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த நிலையில், கில் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விராட் கோலி 5 ரன்களுக்கு அடில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார்.
அற்புதமான ஃபார்மில் உள்ள ஷ்ரேயஸ் ஐயர், ரோஹித்துடன் இணைந்து கூட்டணியைக் கட்டமைத்தார். அரைசதத்துக்குப் பிறகு, தேவையான நேரத்தில் பவுண்டரிகளை நொறுக்கி விளையாடி வந்த ரோஹித் சர்மா, 76-வது பந்தில் சிக்ஸர் விளாசி 32-வது ஒருநாள் சதத்தை எடுத்தார்.
ஷ்ரேயஸ் ஐயருக்கு மீண்டும் ஷார்ட் பந்து யுத்தியைக் கொண்டு வந்தது இங்கிலாந்து. இந்த முறையும் ஷார்ட் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ஷ்ரேயஸ் பதிலளித்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 70 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஹித் சர்மா 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயஸுடன் இணைந்த அக்ஷர் படேல் மீண்டும் நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஷ்ரேயஸ் ஐயர் இந்தத் தொடரில் அடுத்த அரைசதத்தை எடுக்கவிருந்த நிலையில், தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். கேஎல் ராகுல் ஷார்ட் பந்தில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா வந்த வேகத்தில் இரு பவுண்டரிகளை விளாசினாலும், ஷார்ட் ஆஃப் லெங்த் பந்தில் இங்கிலாந்து திட்டத்துக்குப் பலியானார்.
அக்ஷர் படேல் பொறுப்புடன் விளையாடினார். ரவீந்திர ஜடேஜா இரு பவுண்டரிகள் விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 44.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அக்ஷர் படேல் 41 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.