
2026 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கத்தாரிடம் தோல்வியடைந்த நிலையில், உலகக் கோப்பை வாய்ப்பை இழந்துள்ளது.
2026-ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி கத்தார் அணியுடன் நேற்று விளையாடியது.
ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் இந்திய அணி முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பிறகு 2-வது பாதியில் கத்தார் அணியின் யூசஃப் 73-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, 85-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது கத்தார் அணி. இதனால் உலகக் கோப்பை வாய்ப்பை இழந்தது இந்திய அணி. இதில் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி தகுதிச் சுற்றுக்கான அடுத்த நிலைக்கு முன்னேறி இருக்கும்.
இந்நிலையில் 73-வது நிமிடத்தில் கத்தார் அணியால் அடிக்கப்பட்ட கோல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோல் போஸ்ட் அருகே உள்ளே எல்லைக் கோட்டை தாண்டிய பந்தை, கத்தார் வீரர் மீண்டும் உள்ளே இழுத்து அதனை கோல் போஸ்ட்டுக்குள் அடித்தார். நடுவரால் அது கோல் என அறிவிக்கப்பட்டது. விதிமுறைப்படி பந்து எல்லைக்கோட்டை தாண்டினால், அதன் பிறகு எந்த அணி வீரரால் பந்து வெளியேறியது என்பதைப் பார்த்து கார்னர் கிக் அல்லது கோல் கிக் என இவற்றில் ஒன்று தரப்படும்.
ஆனால், நடுவர் இதை கோல் என அறிவிக்க, இந்திய அணிக்கு அது பாதகமாக அமைந்தது. கிரிக்கெட்டில் டிஆர்எஸ் முறை உள்ளது போல், கால்பந்தில் விஏஆர் என்ற முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், முடிவுகளில் சந்தேகம் எழும் பட்சத்தில் அதனை நடுவரே பயன்படுத்த முடியும். எனவே, ஏன் நடுவர் விஏஆர் முறையை பயன்படுத்தவில்லை என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த சர்ச்சைக் குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.