கூட்டநெரிசல்: இந்தியாவில் ஓராண்டில் 200 பேர் பலி

அண்மைச் சம்பவமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழப்பு.
கூட்டநெரிசல்: இந்தியாவில் ஓராண்டில் 200 பேர் பலி
ANI
2 min read

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தைக் காண வந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தது நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஏதோ அரிதான சம்பவம் கிடையாது. இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

கடந்த ஜூலை 2024 முதல் இந்த ஜூன் வரை இந்தியாவில் அப்பாவி பொதுமக்களைக் காவு வாங்கிய கூட்டநெரிசல் சம்பவங்களின் தொகுப்பைத் தற்போது காணலாம்.

ஹத்ராஸ் கூட்ட நெரிசல்: 121 பேர் பலி

கடந்தாண்டு ஜூலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடைபெற்ற மத போதகர் போலே பாபாவின் ஆன்மிக நிகழ்ச்சியில் 2 லட்சம் பேர் திரண்டார்கள். கூட்டம் நடைபெற்ற இடத்தில் காற்றோட்டம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலரும் வெளியேற முயன்றார்கள். திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் பலர் கீழே விழுந்தார்கள். கூட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உள்பட 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதுதொடர்புடைய குற்றப்பத்திரிகையில் 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் மத போதகர் போலோ பாபாவின் பெயர் இடம்பெறவில்லை.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி: 5 பேர் பலி

கடந்த அக்டோபரில் இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு விமான சாகச நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண மெரினா கடற்கரையில் 15 லட்சம் பேர் கூடி உலக சாதனை படைக்கப்பட்டது. எனினும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால், கடும் வெயில், நெரிசல் காரணமாக 240 பேர் மயக்கம் அடைந்தார்கள். 5 பேர் உயிரிழந்தார்கள்.

பிஹார் கோயில் கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

கடந்த ஆகஸ்டில் மத்திய பிஹாரில் உள்ள பாபா சித்தநாத் கோயிலில் புதின ஷ்ரவன் மாதத்தின் 4-வது திங்களில் பூஜையின்போது பக்தர்கள் அதிகளவில் கூடினார்கள். இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 7 பக்தர்கள் உயிரிழந்தார்கள்.

புஷ்பா 2 பயங்கரம்: உயிரிழந்த பெண்

டிசம்பர் மாதம் புஷ்பா 2 படத்தின் சிறப்புத் திரையிடலுக்காக ஹைதராபாதிலுள்ள சந்தியா திரையரங்கத்துக்கு வந்தார் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் கூடினார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்தார். இவருடைய மகன் படுகாயமடைந்தார். இவ்வழக்கு தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பிறகு, பிணை மூலம் அல்லு அர்ஜுன் வெளியே வந்தார்.

திருப்பதியில் உயிரை விட்ட 6 பக்தர்கள்!

இந்த ஜனவரியில் திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்புக்காக வழங்கப்படும் இலவச தரிசன டிக்கெட்டைப் பெறுவதற்காக மக்கள் அதிகளவில் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்தார்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மல்லிகா என்பவரும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதித் துறை விசாரணைக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.

கும்பமேளாவில் உயிரிழந்த 30 பேர்

ஜனவரி இறுதியில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக தடுப்புகளை உடைத்து மக்கள் முந்தியடித்ததில் 30 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

தில்லி ரயில்நிலையத்தில் உயிரிழந்த 16 பேர்

கடந்த பிப்ரவரியில் புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மஹா கும்பமேளாவுக்குச் செல்லவிருந்தவர்கள். இதுதொடர்பாக விசாரிக்க இருவர் அடங்கிய உயர்நிலைக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

கோவா கோயிலில் 7 பேர் பலி

கடந்த மாதம் கோவா ஷிர்கானில் லைராய் தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தார்கள். 80 பேர் காயமடைந்தார்கள். உண்மைக் கண்டறியும் கமிட்டி, "இச்சம்பவத்துக்கு கோயில் கமிட்டி, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, கிராம பஞ்சாயத்து மற்றும் கூட்டம் உள்ளிட்டவை காரணம்" என முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

பெங்களூரு பயங்கரம்: 11 ஆர்சிபி ரசிகர்கள் பலி

சில நாள்களுக்கு முன்பு ஆர்சிபியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க சின்னசாமி மைதானம் அருகே லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஆர்சிபியின் மார்கெடிங் பிரிவு தலைவர் நிகில் சோசாலே, வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்த டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த கிரண், சுமந்த் மற்றும் சுனில் மேத்யூ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பெங்களூர் காவல் ஆணையர் தயானந்த் உள்ளிட்ட ஆறு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in