
சஞ்சு சாம்சனுக்கு நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணாத இந்திய கிரிக்கெட் ரசிகரே இருக்க முடியாது. எல்லாப் பிரார்த்தனைகளுக்கும் பலன் கிடைத்திருக்கிறது. அடுத்தடுத்து டி20 சதங்களை அடித்து தன் இடத்தை நிலைப்படுத்தியிருக்கிறார் சஞ்சு சாம்சன். இந்திய அணி அடித்த 202 ரன்கள் பலத்துடன் பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க பேட்டர்களை நிலைகுலைய வைத்து 141 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்கள்.
டர்பனில் நடைபெற்ற முதல் டி20யில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஒரு சதமடித்தாலும் அபிஷேக் சர்மாவின் சர்வதேச டி20 வாழ்க்கை இன்னும் சரியாக அமையவில்லை. மீண்டும் குறைந்த ரன்களுக்கு (7) ஆட்டமிழந்து வெளியேறினார். நிறைய பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்ததால் பவர்பிளேயில் இந்தியாவுக்கு 56 ரன்கள் கிடைத்தன.
27 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார் சஞ்சு சாம்சன். வழக்கத்தை விடவும் சற்று வேகம் குறைந்து ரன்கள் எடுத்த சூர்யகுமார், 123 ஸ்டிரைக் ரேட்டில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரை சதத்தைக் கடந்த பிறகு சஞ்சுவின் ரன்கள் எடுக்கும் வேகம் இன்னும் அதிகமானது. சிக்ஸர்கள் நாலாபுறமும் பறந்தன. 47 பந்துகளில் சதத்தை அடித்தார். அடுத்தடுத்து டி20 சதங்கள்! சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரு டி20 சதங்கள் அடித்த 4-வது வீரர். முதல் இந்தியர். இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்த ரசிகர்கள் எத்தனை கோடி பேர்! சஞ்சுவுக்கு ஈடுகொடுத்து விரைவாக ரன்கள் எடுத்த திலக் வர்மா, 183 ஸ்டிரைக் ரேட்டில் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 107 ரன்களுக்கு சஞ்சு சாம்சனும் ஆட்டமிழக்க 16-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 175 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 4 ஓவர்களில் நிறைய விக்கெட்டுகளை இழந்ததால் நினைத்தது போல் ரன்கள் குவிக்க முடியவில்லை. இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. ஜெரால்ட் கோட்சியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு இதுபோல அடித்து ஆட முடியாமல் போனது. முதல் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்து அர்ஷ்தீப் பந்தில் ஆட்டமிழந்தார் மார்க்ரம். 4-வது ஓவரில் ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார் ஸ்டப்ஸ். அதே ஓவரில் 104 மீ தூரத்துக்கு சிக்ஸர் அடித்தார் ரிக்கல்டன். அதிரடியாக விளையாடத் தொடங்கிய ரிக்கல்டனை பவர்பிளேயின் கடைசி ஓவரில் 21 ரன்களுக்கு வீழ்த்தினார் வருண் சக்ரவர்த்தி. பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 49 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா.
நடு ஓவர்களில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள் மேலும் அசத்தி தென்னாப்பிரிக்க அணிக்கு நெருக்கடி அளித்து வெற்றியை அவர்களிடமிருந்து ஒரேடியாகத் தள்ளி வைத்தார்கள். 10, 11-வது ஓவர்களில் கிளாசென், மில்லரால் ஒரு பவுண்டரியும் அடிக்க முடியாமல் போனது. ஒரே ஓவரில் கிளாசன் 25 ரன்களுக்கும் மில்லர் 18 ரன்களுக்கும் வருண் பந்தில் ஆட்டமிழந்தார்கள். 13 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களுடன் தடுமாறியது தெ.ஆ. வருண், பிஸ்னாயின் இரு ஓவர்களில் தலா இரு விக்கெட்டுகளை இழந்ததால் இலக்கை நெருங்கவே முடியாமல் போனது தென்னாப்பிரிக்காவுக்கு.
17.5 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வருண், பிஸ்னாய் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் ஆதிக்கத்தை உறுதி செய்தார்கள்.
முதல் டி20யில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. சஞ்சு சாம்சன், ஆட்ட நாயகன்.
சொந்த மண்ணில் விளையாடிய 3 டெஸ்டுகளிலும் தோற்ற இந்திய அணியால் துவண்டு போயிருந்த இந்திய ரசிகர்களுக்கு, தென்னாப்பிரிக்காவில் சஞ்சு சாம்சன் அடித்த அட்டகாசமான சதமும் இந்த டி20 வெற்றியும் சற்று ஆறுதலாகவே அமையும் என நம்புவோம்.