இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?: மயங்க் யாதவுக்குக் குவியும் பாராட்டுகள்!

“அவர் விரைவில் இந்திய அணியில் விளையாட வேண்டும்”
மயங்க் யாதவுக்குக் குவியும் பாராட்டுகள்!
மயங்க் யாதவுக்குக் குவியும் பாராட்டுகள்!ANI

பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்ற மயங்க் யாதவை முன்னால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

நேற்று நடைபெற்ற பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமானார் மயங்க் யாதவ். யாருமே எதிர்பாராத வகையில் 2-வது ஓவரின் முதல் பந்தில் மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் பந்துவீசி அசத்தினார்.

மேலும் அதே ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோவை வீழ்த்தியதன் மூலம் வலுவாகச் சென்று கொண்டிருந்த தொடக்கக் கூட்டணியை உடைத்து, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தில்லியைச் சேர்ந்த 21 வயது மயங்க் யாதவ் இதுவரை இரண்டு முதல்தர ஆட்டம், 11 டி20, 17 லிஸ்ட் ஏ ஆட்டங்களில் விளையாடியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசி எதிரணியை திணறடித்தார்.

மயங்க் யாதவ் வீசிய பந்துகளின் வேகம்

முதல் ஓவர்: 147 கி.மீ, 146 கி.மீ, 150 கி.மீ, 141 கி.மீ, 149 கி.மீ, 147 கி.மீ

2-வது ஓவர்: 156 கி.மீ, 150 கி.மீ, 142 கி.மீ, 144 கி.மீ (விக்கெட்), 153 கி.மீ, 149 கி.மீ

3-வது ஓவர்: 152 கி.மீ, 150 கி.மீ, 147 கி.மீ (விக்கெட்), 146 கி.மீ, 144 கி.மீ, 143 கி.மீ

4-வது ஓவர்: 153 கி.மீ, 154 கி.மீ, 149 கி.மீ, 142 கி.மீ (விக்கெட்), 152 கி.மீ, 148 கி.மீ

இந்நிலையில் மயங்க் யாதவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக அவரின் வேகம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மயங்க் யாதவைப் பாராட்டி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, “இந்திய அணி தனது புதிய வேகப்பந்து வீச்சாளரைத் தற்போது கண்டுபிடித்துள்ளது. அசத்தலான வேகம்” என்றார்.

டேல் ஸ்டெயின், “இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?” என்றார்.

இர்ஃபான் பதான், “மயங்க் யாதவிடம் தீவிரமான வேகம் இருக்கிறது. லக்னௌ அணி ஒரு நல்ல வீரரை கண்டுபிடித்துள்ளது” என்றார்.

ஹர்பஜன் சிங், “என்ன ஒரு அருமையான திறமை?. அவர் பந்துவீசுவதைப் பார்க்க சிறப்பாக உள்ளது. அவர் இன்னும் நிறைய ஆட்டங்களில் விளையாட வேண்டும், விரைவில் இந்திய அணியிலும் விளையாட வேண்டும்” என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி, “மயங்க் யாதவிடம் அதிரடியான வேகம், அருமையான பந்துவீச்சு பாணி என அனைத்தையும் அவரது 21 வயதில் பார்க்க முடிகிறது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in