
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 52 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய பேட்டிங் சோபிக்கவில்லை. கருண் நாயர் 57 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களுக்கு ஷார்ட் பந்தில் ஆட்டமிழந்தார். டெயிலண்டர்களிடமிருந்து இன்றும் ரன் வரவில்லை. கடைசி 4 விக்கெட்டுகளை 6 ரன்களுக்குள் இழந்தது இந்தியா.
கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக இந்த டெஸ்டில் மேற்கொண்டு பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில், அட்கின்சன் கைக்கொடுத்து அசத்தினார்.
இங்கிலாந்து தொடக்க பேட்டர்கள் ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் டி20 பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி காட்டினார்கள். 4-வது ஓவரிலேயே ரிவர்ஸ் புல் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்தார் டக்கெட். ஓவல் மைதானத்தில் வெயில் இருந்ததால், இதை பேட்டிங்குக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். 6.6 ஓவர்களில் இங்கிலாந்து 50 ரன்கள் எடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 78 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தபோது, ஆகாஷ் தீப் பந்தில் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் விளையாட முயன்று டக்கெட் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து மிரட்டல் நிலையில் இருந்தது.
உணவு இடைவேளைக்குப் பிறகு, முஹமது சிராஜ் ஆட்டத்துக்குள் தனது அதிகாரத்தைச் செலுத்தினார். அரை சதம் அடித்து 64 ரன்களில் விளையாடி வந்த ஸாக் கிராலியை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். கேப்டன் ஆலி போப் (22) மற்றும் ஜோ ரூட் (29) ஆகியோரை அற்புதமான லெந்தில் பந்தை உள்பக்கமாக வீழ்த்தினார் சிராஜ். அடுத்து அட்டகாசமான யார்க்கர் பந்தை வீசி பெத்தெல் விக்கெட்டையும் வீழ்த்தினார் சிராஜ். பிரசித் கிருஷ்ணா ஜேமி ஓவர்டனை டக் அவுட் செய்ய, தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது. இங்கிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு, கஸ் அட்கின்சன் இரு பவுண்டரிகள் அடித்து பிரசித் கிருஷ்ணா வேகத்தில் ஆட்டமிழந்தார். ஜாஷ் டங்குடன் இணைந்து சற்று தாக்குப்பிடித்து விளையாடிய புரூக் அரை சதம் அடித்தார். இவரே கடைசி விக்கெட்டாக சிராஜ் பந்தில் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிறிஸ் வோக்ஸ் பேட்டிங் செய்ய வரவில்லை.
இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 92 ரன்களை சேர்த்தாலும், 247 ரன்களுக்கு ஆட்டமிழந்து 23 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இந்திய அணியில் முஹமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தைப் போல அதிரடியாக விளையாடத் தொடங்கினார் யஷஸ்வி ஜெயிஸ்வால். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் சிறிது நேரம் மட்டுமே விளையாடி 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தவறவிடப்பட்ட கேட்ச் வாய்ப்பை சாய் சுதர்சன் பயன்படுத்திக் கொள்ளவில்லை
இரு கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட ஜெயிஸ்வால் 44 பந்துகளில் அரை சதம் அடித்தார். நைட் வாட்ச் மேனாக ஆகாஷ் தீப் களத்தில் இருந்தார். அப்போது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.
இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்து 52 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Ind v Eng | India v England | India vs England | Ind vs Eng | Oval Test | 5th Test | India Tour of England | India England Test Series | Chris Woakes | Team England | England Cricket | Woakes Injury | Yashasvi Jaiswal | Josh Tongue | Gus Atkinson | Zak Crawly | Ben Duckett | Mohammed Siraj | Prasidh Krishna