லக்னௌ அணியில் கே.எல். ராகுல் நீடிப்பது உறுதியாகியுள்ளது, மேலும் அந்த அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025-க்கு முன்பாக லக்னௌ அணியின் முக்கியமான சில முடிவுகள் குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், லக்னௌ அணியில் கே.எல். ராகுல் நீடிப்பார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ராகுல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, லக்னௌ குடும்பத்தில் ஒருவராக ராகுலைப் பார்க்கிறோம் என்றார்.
மேலும், லக்னௌ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 வரை லக்னௌ அணியின் ஆலோசகராக கம்பீர் செயல்பட்டார். இதைத் தொடர்ந்து 2024-ல் கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்ட அவர் தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
முன்னதாக, ஜாகீர் கான் 2018-2022 வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் இயக்குநர் மற்றும் உலகளாவிய வளர்ச்சித் திட்டங்களின் தலைவராகவும் பணியாற்றினார்.
இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பவுள்ளார்.
முன்னதாக, ஐபிஎல் 2025-ல் ஆர்சிபியில் கே.எல். ராகுல் விளையாடுவார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் லக்னௌ அணியில் கே.எல். ராகுல் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.