ஒலிம்பிக்ஸில் 2 வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவிலும், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதன் மூலம் ஒரே ஒலிம்பிக்ஸில் இரு பதங்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார் மனு பாக்கர்.
இந்நிலையில் மனு பாக்கருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.
இதில் பேசிய அவர், “வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமானப் பதக்கங்களை வெல்வோம். மற்ற நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மற்ற நாடுகளில் சிறுவயதில் இருந்தே தங்களின் பயிற்சியைத் தொடங்குகிறார்கள். ஆனால், இந்தியாவில் முதலில் ஒரு குழந்தை தனது விருப்பத்தை அறிந்து, அதன் பிறகு பெற்றோர்களிடம் பேசி, அதற்கு அவர்கள் சம்மதித்து இறுதியாக அவர்கள் திறமை வெளிப்படும் பட்சத்தில் அரசின் பார்வை அவர்கள் மீது விழும். எனவே, அதிகமானப் பதக்கங்களை பெற, இதுபோன்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றார்.