டி20 கிரிக்கெட்டில் நெ.1 வீரராக இருந்த பிரபல இங்கிலாந்து பேட்டர் டேவிட் மலான், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளார்.
37 வயது மலான் இங்கிலாந்து அணிக்காக 22 டெஸ்டுகள், 30 ஒருநாள், 62 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த இரு இங்கிலாந்து வீரர்களில் மலானும் ஒருவர் (மற்றொருவர் ஜாஸ் பட்லர்).
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் மலானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெள்ளைப் பந்து தொடர்களிலும் மலான் இடம்பெறவில்லை. இதையடுத்து சர்வதேச கிரிகெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
டி20யில் தனி முத்திரை பதித்த மலான், 2020 செப்டம்பரில் டி20 தரவரிசையில் நெ.1 இடத்துக்கு முன்னேறினார். மேலும் டி20யில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை (24 இன்னிங்ஸ்) எடுத்த வீரர் என்கிற சாதனையையும் படைத்தார். 2022-ல் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பையை வென்றபோது அணியில் இடம்பெற்றிருந்தாலும் காயம் காரணமாக நாக் அவுட் ஆட்டங்களில் அவரால் விளையாட முடியாமல் போனது.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஜூன் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை 15 இன்னிங்ஸில் 5 ஒருநாள் சதங்களை எடுத்த மலான், 2023 ஒருநாள் உலகக் கோப்பையிலும் ஒரு சதமடித்தார். எனினும் அதிரடி வீரர்களுக்குப் பஞ்சமில்லாத இங்கிலாந்து அணியில் மலானுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போதைய ஓய்வு அறிவிப்பினால் டி20 லீக் போட்டிகளில் அதிகளவில் மலான் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.